தஞ்சாவூர்: தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பராமரிப்பு இன்றி இருந்த பூங்காவை தற்காலிக ரவுண்டானாவாக மாற்றி போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தஞ்சாவூரில் உள்ளது தொல்காப்பியர் சதுக்கம். 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்தது. அப்போது தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


அப்படி மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பியர் சதுக்கம். தஞ்சையிலிருந்து நாகை - பட்டுக்கோட்டை சாலைகள் பிரியும் சந்திப்பில் 5 அடுக்கு கோபுரம் அமைப்பாக தமிழ் மொழிக்கு தொன்மையான இலக்கணம் படைத்த “தொல்காப்பியர் நினைவு கோபுரம்” அமைக்கப்பட்டது. இந்த இடம் “தொல்காப்பியர் சதுக்கம்” என பெயரிடப்பட்டது..


ரூ.75 லட்சம் மதிப்பில் இந்த தொல்காப்பியர் சதுக்கத்தில் பூங்காவுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு மக்களுக்கு மாலை நேரத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் இடமானது. ஐந்தாவது தளம் வரை செல்ல படிக்கட்டுகளும் உண்டு. 5 வது தளத்தில் நின்று பார்த்தால் தஞ்சை நகரின் அழகை பார்த்து ரசிக்க முடியும். தஞ்சைக்கு சுற்றுலா வருபவர்கள் பார்த்து ரசித்து, மாலைநேரத்தை இனிமையுடன் கழிக்க சிறந்த இடங்களில் தொல்காப்பியர் சதுக்கமும் ஒன்று.


தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் இருந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அந்த பூங்காவை சுற்றியிருந்த தடுப்பு கம்பிகள் பெயர்ந்து கீழே விழுந்தன. அதன்பிறகு மதுப்பிரியர்கள் அந்த பூங்கா பகுதியில் அமர்ந்து மது அருந்தியதுடன் மதுப்பாட்டில்களையும் அங்கேயே போட்டுவிட்டு சென்றனர். இந்த பூங்கா சீரமைக்கப்படுமா?  என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.




மேலும் தஞ்சையில் இருந்து நாகை, திருவாரூர், சாலியமங்கலம் நோக்கி செல்லும் பஸ்கள், வாகனங்களும், நாகை பகுதியில் இருந்து தஞ்சை நோக்கி வரும் பஸ்கள், வாகனங்களும், தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி நோக்கி செல்லும் பஸ்களும் இந்த பூங்கா பகுதியில் உள்ள ஒரே சாலையை தான் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதனால் பராமரிப்பு இன்றி இருந்த பூங்காவை இடித்து அந்த பகுதியில் ரவுண்டானா அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறையும் போக்குவரத்து ஒழுங்குபிரிவும் முடிவு செய்தது. அதன்படி அந்த பூங்காவின் இருபுறமும் மையப் பகுதியில் பொக்லின் இயந்திரம் மூலம் இடித்து புதிதாக சாலை அமைக்கப்பட்டது. தற்போது தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் மூலம் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் இருந்து நாகை நோக்கி செல்லும் பஸ்கள் இதற்கு முன்பு எந்த வழியாக சென்றதோ, அதே வழியில் தான் செல்கின்றன.


நாகை பகுதியில் இருந்து தஞ்சை நோக்கி வரும் பஸ்கள் தொல்காப்பியர் சதுக்கம் வந்தவுடன் ரவுண்டானாவின் இடதுபுறமாக போடப்பட்டுள்ள சாலையின் வழியாக சென்று வருகிறது. பட்டுக்கோட்டை,மன்னார்குடி செல்லும் பஸ்களும், அதே பகுதியில் இருந்து தஞ்சை நோக்கி வரக்கூடிய பஸ்களும் முன்பு போலவே வந்து செல்கின்றன.


இதுகுறித்து போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் கூறியதாவது:  தற்காலிக ரவுண்டானா மூலம் விபத்துக்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. தற்போது இரும்பு தடுப்புகளால் ரவுண்டானா அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு புதிதாக சாலை அமைக்கப்பட்டு சிமெண்ட், கம்பிகள் மூலம் ரவுண்டானா நிரந்தரமாக அமைக்கப்படும். வாகனங்கள் செல்வதில் தற்போது எவ்வித இடர்பாடும் இல்லை. பொதுமக்களும் இதற்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். இவ்வாறு அவர்  கூறினார்.