தஞ்சாவூர் மாநகரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார். இதற்கு முன்பாக டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



தஞ்சாவூர் தெற்கு வீதியில் பொலிவுறு நகரத் திட்டப் பணியை ஆய்வு செய்த அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கூறினர். இதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் விரைவுபடுத்தி வருகிறோம்.

இப்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, அதிகபட்சமாக மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விடும். தற்போது, நான்கு ராஜ வீதிகளில் ரூ. 20 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. முன்பு இந்த வடிகாலில் அனைத்துக் கட்டடங்களும் சாக்கடை நீர் செல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம் இப்போது அகலமான சாலையாக உள்ளது. மன்னர்கள் காலத்தில் இருந்தது போன்று நான்கு ராஜ வீதிகளும் விரிவுபடுத்தப்பட்டு, மழை நீர் வடிகால் அமைப்பதற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வரும்போது அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, நான்கு வீதிகளிலும் தரை வழியாக கண்ணாடி நாரிழையில் மின் இணைப்பைக் கொண்டு செல்வதற்காக அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் தேரோட்டம் நடைபெற்றாலும், மின் தடை செய்யாமல் தவிர்க்கலாம். இதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில 2 மாதத்திற்கு முன்பு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மண்டலக் குழுத் தலைவர் எஸ்.சி. மேத்தா, மாமன்ற உறுப்பினர் ஜெ.வி. கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தஞ்சாவூரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ”பல பகுதிகளிலும் சாலைகள் மிகுந்த மோசமாகவே உள்ளது. மெயின் பகுதிகள் ஒருசில இடங்களில் போடப்பட்டு இருந்தாலும் பல்வேறு உள் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக தெற்கு வீதி பகுதியில் மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கழிவு நீர் வடிகால்கள் பெரிதாக கட்டப்பட்டாலும் உள் சந்துகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமான உள்ளன. இதனால் அங்கிருந்து வரும் கழிவுநீர் சரியான முறையில் வடிகாலில் விழாத நிலை உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.