Ashoka Halwa: அடடா என்ன ருசிடா.. பட்டதும் கரையுதே.. - திருவையாறு அசோகா அல்வா.. கண்டுபிடித்தது யார்?
Thiruvaiyaru Ashoka Halwa: திருவையாறு அசோகா அல்வாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது தியாகராஜ ஆராதனை விழாதான்.

தஞ்சாவூர்: அடடா ருசிடா திருவையாறு அசோகா தனி ருசிடான்னு பாட்டே பாடலாம். அந்தளவிற்கு நாவில் ருசி நர்த்தனமாடும். இப்படி திருவையாறு அசோகாவிற்கு தனி ருசி கிடைக்க அது தயாரிக்கப்படும் விதம்தான்.
உணவுகள், சிற்றுண்டிகள், இனிப்புகள் என அனைத்திற்கும் தனிச்சிறப்புப் பெற்ற ஊர்களில் தஞ்சாவூர் மாவட்டக் காவிரிக்கரையோரம் உள்ள அழகான ஊர் திருவையாறுக்கு தனி பெருமையே உண்டு. தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள இந்த ஊரில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆகிய ஐந்து ஆறுகள் ஓடுவதால், திருவையாறு என அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐயாறப்பர் கோயில் பிரசித்தி பெற்றது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜர் வாழ்ந்து, முக்தி பெற்ற ஊர் இது. அவரது சமாதியில் ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற ஆராதனை விழா நடைபெற்று வருகிறது.
Just In



இச்சிறப்புகளின் வரிசையில் ஐம்பது ஆண்டுகளாக அனைவரது நினைவிலும் இருக்கும் திருவையாறு அசோகாவும் ஒன்று. கோதுமை பாலில் செய்யப்படுவது அல்வா. இந்த அல்வாவை போன்ற தோற்றமுடைய அசோகா செய்வதற்குப் பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், மைதா மாவு, பால்திரட்டு, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் தேவை. இத்தனைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அசோகாவின் தன்னிகரற்ற ருசிக்கு மிக முக்கியமான காரணம் காவிரி நீர். எனவே, வேறு ஊர்களில் அசோகா தயாரிக்கப்பட்டாலும், திருவையாறு அசோகாவுக்கு ஈடு இல்லை என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இனிப்பு பண்டங்களிலேயே அசோகாவின் விசேஷம் என்னவென்றால் அதை சாப்பிட வேண்டியதில்லை என்பதுதான். ஏங்க சாப்பிடாமா அப்படியே வைச்சா இருக்க முடியும்ன்னு கேட்காதீங்க. நாக்கில் பட்டாலே போதும், அசோகா கரைந்துவிடும். சாப்பிடுபவர் செய்ய வேண்டியதெல்லாம் அதன் ருசியை மெய்மறந்து அனுபவிக்க வேண்டியதுதான். சில பதார்த்தங்களை ஆற வைத்துதான் சாப்பிட வேண்டும். அசோகாவையோ எப்படி சாப்பிட்டாலும் ருசிக்கும். அதுதான் அதோட ஸ்பெஷல்.
இந்த அசோகாவின் பிறப்பிடமே திருவையாறுதான். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு திருவையாறு தெற்கு வீதியில் பி.வி. ராமய்யர் இந்த அசோகா அல்வாவை அறிமுகப்படுத்தினார். மிகச் சிறந்த சமையல் கலைஞரான ராமய்யருக்கு வழக்கமான பலகாரங்களில் விருப்பமில்லை. எதையும் வித்தியாசமாக செய்தே பழகிய அவர், தன் வாழ்நாளில் அறிமுகப்படுத்திய செம சூப்பர் பலகாரம்தான் இந்த அசோகா. அக்காலத்திலேயே அசோகா மிகவும் பிரபலமாக இருந்தது.
பின்னாளில் 197ம் ஆண்டு முதல் அக்கடையை கோவி. கணேசமூர்த்தி பொறுப்பேற்று நடத்தினார். ராமய்யரின் கைப்பக்குவமும், பாரம்பரிய முறைப்படியான தயாரிப்பும் இப்போதும் தொடர்கிறது. தற்போது, ஆண்டவர் அல்வா கடை என்ற பெயரில் தொடரும் இக்கடை நாள்தோறும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணி வரை வாடிக்கையாளர்களின் அன்பு பிடியில் சிக்கி திணறுகிறது.
இக்கடையைக் கடந்து செல்பவர்களில் அசோகாவின் வாசனையில் ஈர்க்கப்பட்டு உள்ளே வந்து சுவைத்துவிட்டுதான் செல்கின்றனர். காலங்கள் கடந்தாலும் இப்போதும் பாரம்பரிய முறைப்படி, வாழை இலையில் கொசுறாக கொஞ்சம் காரத்துடன் பரிமாறப்படும் அசோகாவை சுட சுட சாப்பிட்டு வீட்டுக்கு பார்சலும் வாங்கி செல்வதுதான் தனிச்சிறப்பு. ஒரு காலத்தில் திருவையாறு நகர மக்களை மட்டும் சாப்பிட வைத்த அசோகவின் ருசி, காலப்போக்கில் சுற்றுவட்டார மக்களையும் தேடி வந்து சாப்பிட வைக்கும் அளவிற்கு ஈர்த்துவிட்டது.
திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு வரும் இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் பலரும் இந்த அசோகா இனிப்புக்கு ரசிகர்கள்தான். வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வருபவர்களெல்லாம் திருவையாறு அசோகாவை மறப்பதில்லை.
திருவையாறு அசோகாவின் தன்னிரகற்ற ருசிக்கு முக்கியமான காரணம் காவிரி தண்ணீர். மற்ற ஊர்களில் செய்யப்படும் அல்வா மற்றும் அசோகாவை விட இங்குள்ள ருசியின் தனி மகத்துவத்துக்குக் காரணமே திருவையாற்றுக் காவிரி நீர்தான். மேலும், பழமையை மாற்றாமல், பாரம்பரிய முறைப்படி தயாரிக்கின்றனர். இதை தயார் செய்வதற்கு விறகு அடுப்புதான் பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாம்தான் திருவையாறு அசோகா மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்புக்குக் காரணம்.
திருவையாறு அசோகா அல்வாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது தியாகராஜ ஆராதனை விழாதான். இந்த விழாவுக்கு உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் வந்து செல்கின்றனர். இந்தக் கடைக்கும் தவறாது வந்து அசோகாவை வாங்கி செல்கின்றனர்.