தஞ்சாவூர்: நிலங்கள் அளவீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியை களைய வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே களத்துார் பஞ்சாயத்தில், களத்துார் கிழக்கு, மேற்கு என இரண்டு கிராமம் உள்ளது. தற்போது, களத்துார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான வயல், தோப்பு, வீட்டு மனை உள்ளிட்ட என சுமார் 250 ஏக்கர் நிலத்தின் கிரயப்பத்திரம்,பட்டா,கணினி சிட்டா,வீட்டு வாி ரசீது ஆவணங்களில் களத்துார் மேற்கு என பதிவாகியுள்ளது.
இந்நிலையில், களத்துார் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியான சூரியநாராயண புரம் கிராமத்துடன், களத்துார் மேற்கு பகுதியில் உள்ள சுமார் 184.62 ஏக்கர் நிலத்தை இணைப்பதாக வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களாக, ஆன்லைன் சிட்டாவையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், ஏற்பட்ட குளறுபடியால், விவசாயிகள், பொதுமக்கள் வங்கிக் கடன், கல்விக் கடன், நில ஆவணங்கள் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, வருவாய்த் துறையினர் உடனடியாக பழைய முறைப்படி தங்கள் கிராமத்துடனே இந்த விளை நிலங்களைச் சிட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள், களத்துார் கிராம கமிட்டி செயலாளர் மாறன், தலைவர் கண்ணன், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, ரேஷன்,ஆதார்,வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அளித்தனர்.
இது குறித்து களத்தூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் முருகன் கூறியதாவது; களத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட களத்தூர் கிழக்கு,மேற்கு,சூரியநாராயண புரம் கிராமங்கள் உள்ளது. சூரியநாராயண புரத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், மற்றொருவரிடம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் 366.97 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். ஆனால், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என வழக்கு நடந்தது. முறையாக வருவாய்த்துறையினர் வழக்கை நடத்த நிலையில், அந்த இடம் தனி நபர்களுக்குச் சொந்தமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து, சூரியநாராயண புரத்தைச் சேர்ந்தவர்கள் பட்டா கேட்டுக் கடந்த 2014ல் சென்னை ஐகோர்டில் வழக்குப் போட்டனர். அப்போது, சூரியநாராயண புரத்தில் உள்ள 366.97 ஏக்கர் நிலத்துடன், களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள 184.62 ஏக்கர் நிலத்தையும் சேர்ந்த தவறாகச் சேர்த்து அளவீடு செய்யப்பட்டது.
வருவாய்த் துறை அதிகாரிகள் தவறாகச் செயல்பட்டதால், களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள நிலத்திற்கு சூரியநாராயண புரத்தில் பட்டா,சிட்டா வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த தவற்றை சாி செய்து, மீண்டும் பழைய படி எங்களுக்கு நிலத்திற்குச் சிட்டா வழங்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.