திறமைசாலிகளின் வெற்றிக்கள் மதிப்பு மிக்கவை. காலில் தைக்கும் முள்ளை கையால் எடுக்கிறோம். அப்போ முள் மதிப்பு மிக்கதா? இல்லை. அதுபோல்தான் தோல்வியை புறந்தள்ளி வெற்றியை நோக்கி வீறுநடை போட வேண்டும். அப்படி செய்தால் வெற்றிக்கோடு உன்னை நோக்கி ஓடி வரும். விடாமுயற்சி விண்ணை தொடுமா? தொடும்... தொட்டுள்ளது. எங்கு தெரியுங்களா? தஞ்சையில்தான்.

அரசு பள்ளி என்றால் பார்க்கும் பார்வையே வேறாக இருந்த காலம் மலையேறி விட்டது. சாதிக்க பிறந்தவர்கள் அரசு பள்ளிகளில்தான் படிக்கின்றனர் என்று மாணவ, மாணவிகள் நிரூபித்து வருகின்றனர். ஒன்றா இரண்டா முத்து மாலையை போன்று அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு விதத்திலும் மிளர்கின்றனர். ஒளிர்கின்றனர்

படிப்பு, விளையாட்டு, தனித்திறமைகள் என்று தங்களையும் உயர்த்திக் கொண்டு தங்கள் பள்ளியின் பெருமையை அனைவரும் உணர வைக்கின்றனர். அந்த வகையில் தஞ்சை மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி சாரண மாணவிகள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று தங்கள் பள்ளிக்கு பெருமையை அள்ளிக் கொண்டு வந்துள்ளனர்.



கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடம் மாவட்டம் மூடுபிரி ஆழ்வா இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் கடந்த டிசம்பர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருந்திரளணி முகாம் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் 18 நாடுகளை சேர்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பிரமாண்டமாக நடந்த இந்த முகாமில் தஞ்சை கல்வி மாவட்டத்தின் சார்பில் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த சாரணிய மாணவிகள் பத்தாம் வகுப்பை சேர்ந்த வைஷ்ணவி, ராகவி, லோகேஸ்வரி, 9ம் வகுப்பை சேர்ந்த ஜெயஸ்ரீ, யுவஸ்ரீ, எழிலரசி, ஹர்ஷினிசரோ, நேத்ரா, சுஜா ஆகிய 9 பேர் சாரணிய ஆசிரியை இந்துமதி தலைமையில் பங்கேற்றனர்.





இவர்களை சாரண இயக்க மாவட்ட செயலாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான சந்திரமௌலி ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றார். பெருந்திரளணி முகாமில் நடந்த பல்வேறு செயல்பாடுகளில் இம்மாணவிகள் பங்கேற்றனர். தாங்கள் பங்கேற்ற செயல்பாடுகளில் தங்களின் திறமையை காட்டி பேட்ஜ் பெற்றுள்ளனர். இப்படி ஒவ்வொரு மாணவியும் தலா 9 எண்ணிக்கையில் பேட்ஜ் பெற்றுள்ளனர். ஒவ்வொரு நிகழ்விலும் கொடுக்கப்படும் டாஸ்க்களில் குறிப்பிட்டவற்றை முடிக்க வேண்டும். அப்படி முடித்தால்தான் பேட்ஜ் பெற முடியும்.

அந்தவகையில் தஞ்சை மானோஜிப்பட்டி பள்ளி மாணவிகள் தங்கள் திறமையை நிரூபித்து தலா 9 பேட்ஜ்களை பெற்று அசத்தி உள்ளனர். மேலும் இந்த முகாமில் பங்கேற்றதற்கான பன்னாட்டு அளவிலான சான்றிதழ்களையும் பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளனர். மேற்கண்ட மாணவிகள் 9 பேரும் இதற்கு முன்பு மாவட்ட அளவில் நடந்த பல்வேறு கலை விழாக்களில் விருது, பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவிகளின் வெற்றி குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளிகளில் பங்கேற்றது நாங்கள் மட்டும்தான். எங்கள் பள்ளி சாரண மாணவிகள் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். மேலும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள இந்த முகாம் முக்கியமான ஒன்றாகும். இந்திய அளவில் முதன்முறையாக நடைபெற்ற சர்வதேச கலாச்சார பெருந்திரளணி முகாமில் பங்கேற்று பேட்ஜ் மற்றும் சான்றிதழ்களை பெற்று அசத்தி உள்ளனர். இது எங்கள் பள்ளிக்கு மிகுந்த பெருமையை சேர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற ஒரே ஒரு ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள உயர்நிலைப்பள்ளியும் எங்களுடையதுதான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.