பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை இன்று சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தொங்கி வைத்தனர். 




அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 427 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 30 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.  




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் அங்காடிகளில் சர்வர் கோளாறு காரணமாக பொங்கல் தொகுப்பு திட்டம் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, இதனால் ரேஷன் கடை வாசலில் பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர்.  ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை இணையதள இணைப்பு கிடைத்த காரணத்தால் விட்டுவிட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது. இதனால் பொங்கல் பரிசு தொகையினை பெற ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு படையெடுத்த மக்கள் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளனர்.