'உடலில் குறை இருந்தால் என்ன, என் உள்ளத்தில் குறையில்லை, தன்னம்பிக்கையின் வலு குறையவில்லை' என்று ஓட்டத்தில் ஆக்ரோஷமும், நீளம் தாண்டுதலில் உறுதியும் கொண்டு சத்தமின்றி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை குவித்து வருகிறார் தஞ்சை மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி எம்.சசிகலா (வயது 16).
மானிடப் பிறவியில் தான் எத்தனை தடைகள். ஊனமில்லாதவர்களில் பலரே தடைகளை தாண்ட முடியாமல், தவித்து ஒடிந்து விழும்போது உடலில்தான் குறை... மனதில் இல்லை என்று தகர்த்தெறிந்து சத்தமின்றி சாதனை புரிகின்றனர் மாற்றுத்திறனாளிகள். இவர்களை திறமை வாய்ந்த திறனாளிகள் என்று கூறுவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவு என்று ஓட்டத்தில் புயலாக, நீளம் தாண்டுதலில் புலியாக பதக்கங்களை வென்றுள்ளார் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத மாணவி எம்.சசிகலா.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெற்றோர் முருகானந்தம், லதா. கூலித் தொழிலாளர்கள். பிறவியிலேயே இந்த பாதிப்புகளை கொண்ட சசிகலாவை சாதிக்கும் கலாவாக மாற்றியுள்ளது தஞ்சை மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி விடுதியில் தங்கி படிப்புடன் தன் விளையாட்டு திறமையை கண்டுபிடித்த உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் அளித்த பயிற்சிகளால் இன்று அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் சசிகலா. கடந்த 2019ம் ஆண்டு மயிலாடுதுறையில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடந்த விளையாட்டுப் போட்டிகளில் 16 வயதுடையோருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம், நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம், குழுப் போட்டியான தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் என்று கிடுகிடுவென்று பதக்கத்தை குவித்துள்ளார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டரில் வெள்ளி, 800 மீட்டரில் வெண்கலம், நீளம் தாண்டுதலில் வெண்கலம் குவித்துள்ளார் சசிகலா.
இதேபோல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 2020 மே மாதம் நடத்திய மாவட்ட அளவிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, நீளம் தாண்டுதலில் வெள்ளி என்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்துள்ளார். வாய் அசைவதை பார்த்து பேசுவதை புரிந்து கொள்ளும் சசிகலாவின் ஓட்ட வேகத்தை கண்டறிந்து சரியான முறையில் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் கூறுகையில், திறமையான இந்த மாணவிக்கு சரியான முறையில் ஸ்பான்சர் கிடைத்தால் மேலும், மேலும் சாதனைகள் புரிவார் என்று தெரிவித்தார். ஆசிரியர் கூறுவதை உன்னிப்பாக கவனித்து தலையாட்டிய சசிகலாவின் கம்பீரமாக பார்த்த கண்கள் தான் திறமையான திறனாளி என்பதை உணர்த்தியது. உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை என்பது எத்தனை சரியான வார்த்தை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்