தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கடைகளில் எலி பேஸ்ட் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.



தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய செஞ்சிலுவை சங்கம், கவின்மிகு தஞ்சை இயக்கம் ஆகியவை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் தொடக்கி வைத்தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி உள்பட பல்வேறு அரசு மருத்துவனைகளில் தற்கொலை செய்து கொள்பவர்களில் அதிக அளவில் எலிபேஸ்டை பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இதனால், எலி பேஸ்ட் விற்கக்கூடாது என தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் எலி பேஸ்ட் விற்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். எலி பேஸ்ட் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கிறோம். விற்பனை செய்யக்கூடிய வணிகர்கள், கடைகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாட வேண்டும். தேவையில்லாத பொருள்களை எரிக்கக்கூடாது. மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேரணி காந்திஜி சாலை வழியாக அரண்மனை வளாகத்தில் முடிவடைந்தது. இதில், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், சுகாதாரத் துறைத் துணை இயக்குநர் நமச்சிவாயம், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் ராதிகா மைக்கேல், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த 44 பேர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பிலிருந்து 75 ஆயிரம் சதுர அடி இடத்தை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தினர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் சன்னதி தெருவில் உள்ள 75 ஆயிரம் சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு என்ற பெயரில் இருந்து வருகிறது.

கோயிலில் நடைபெறும் உற்சவத்தின்போது சுவாமி புறப்பாட்டை நடத்தும் 6 கிராமங்களை சேர்ந்த 140 குடும்பத்தினருக்கு 3 மாதங்களுக்கு முன்பு கோயில் நிர்வாகம் இந்த இடத்தை வீடு கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்தது. இந்நிலையில் இந்த இடம் வருவாய் துறைக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து வட்டாட்சியர் சுசிலா, பேரூராட்சி செயல் அலுவலர் மங்கையற்செல்வி உள்ளிட்டோர் தொடர்புடைய இடத்தைக் காவல் துறையினரின் பாதுகாப்புடன் கையகப்படுத்தச் சென்றனர்.
அப்போது 14 பெண்கள் உள்பட கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் என 44 பேர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை கையகப்படுத்தக் கூடாது என தடுத்து நிறுத்தினர்.

மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 44 பேரையும் திருவிடைமருதூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் வருவாய்த் துறை அலுவலர்கள் கம்பி வேலி அமைத்து தொடர்புடைய இடம் அரசுக்குச் சொந்தமானது என்ற விளம்பர தட்டி 4 இடங்களில் அமைத்து கையகப்படுத்தினர்.