தஞ்சாவூர் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

தஞ்சை மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி 2 நாட்கள் நடக்கிறது. இதை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த விற்பனை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு இந்த சந்தை நடத்தப்படுகிறது. இது மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கூடுதல் விற்பனை செய்யும் வாய்ப்பும், கூடுதல் வருவாயும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்படுகிறது.

இந்த கண்காட்சியில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 38 மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, ஐ. ஓ. பி. வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, கல்லூரி முதல்வர் சிந்தியாசெல்வி, உதவி திட்ட அலுவலர் சரவணபாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




தூய்மை பொங்கல் விழா

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் பேரூராட்சி சார்பில் வளம் மீட்பு பூங்கா வளாகத்தில் தூய்மை பொங்கல் விழா நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொங்கல்விழா  நிகழ்ச்சியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள்  புதுப்பானை வைத்து பச்சரிசி பொங்கலிட்டு சாமிக்கு படைத்தனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது.

தொடர்ந்து பேரூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பேரூராட்சி சார்பில்  புத்தாடைகள்  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல்அலுவலர், துணை தலைவர்,  அலுவலக உதவியாளர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,   துப்புரவு மற்றும் அலுவலக பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆடுதுறை பேரூராட்சி சார்பில் பொங்கல் பண்டிகை சிறப்பு தொகுப்புகள் வழங்கும் விழா மற்றும் தேசிய இளைஞர் தினவிழா பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சிவலிங்கம் வரவேற்றார். பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர், கவுன்சிலர் கோசி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுதுறை பேரூராட்சி சார்பில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு சில்வர் பொங்கல் பானை, மஞ்சள், கடலைப்பருப்பு, பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்டவைகள் கொண்ட சிறப்பு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

இதில் கவுன்சிலர்கள் பால தண்டாயுதம், முத்துபீவி ஷாஜஹான், மீனாட்சி முனுசாமி, சரவணன், சாந்தி குமார், சுகந்தி சுப்ரமணியன், மாலதி சிவக்கொழுந்து, குமார், கண்ணன், செல்வராணி சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் பரமேஸ்வரி சரவணக்குமார் நன்றி கூறினார்.