தஞ்சாவூர்: அக்னி நட்சத்திரம் முடிந்த பல நாட்கள் கடந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாததால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள புல்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


அக்னி நட்சத்திரம் முடிந்தும் தஞ்சையில் அனல் காற்றுடன் மக்களை சுட்டெரித்து வரும் வெயில் 100 டிகிரியை கடந்து கொளுத்தி வருகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைத்தது. இந்த 25 நாட்களும் கத்திரி வெயில் காலத்தில் பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு சூரியகதிர்கள் சுட்டெரித்தது.


பொதுவாகவே அக்னி நட்சத்திர காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் முடிந்ததும் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடித்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபடி இல்லை.


இந் நிலையில் தஞ்சையில் கடந்த 2 நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைத்தது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து சென்றவர்கள் பலர் குடையை பிடித்தபடி நடந்து சென்றனர். அதேநேரத்தில் சில ஆண்கள் தலையில் துண்டை போர்த்தியபடியும், பெண்கள் சேலை முந்தானையாலும், துண்டாலும் தலையை மூடியபடி சென்றனர்.


அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைத்து வருகின்றனர். மேலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வெயிலின் பிடியில் சிக்கி தவித்தனர். கோவிலுக்கு வந்த பெரும்பாலானவர்கள் நிழல் இருக்கும் இடத்தில் அமர்த்து இளைப்பாறினர். வெயிலினால் கோவில் வளாகத்தில் உள்ள புற்களை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணியும் நடந்தது.


கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி பழம்,  நுங்கு வாங்கி சாப்பிட்டனர். மேலும் பழக்கடைகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோல் குளிர்ச்சி தரக்கூடிய, தாகத்தை தணிக்க கூடிய இளநீர், பழச்சாறு வகைகள், கரும்பு சாறு உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிட்டனர்.


கடந்த 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் தண்ணீர் வர ஆரம்பித்தால் வெயிலின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் வரும் நிலையில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து வெப்பம் தணிந்து விடும் என்கின்றனர்.