மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டமான விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் நொண்டியடிக்கிறது. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் தஞ்சை விவசாயிகள்.


தமிழகத்தில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார். 2005-ம் ஆண்டு வரை சாதாரணப் பதிவு அடிப்படையில் பதிவு செய்த விவசாயிகள், 2011-ம் ஆண்டு வரை சுயநிதி திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் என 50 ஆயிரம் விவசாயிகளுக்கும், தட்கல் திட்டத்தில் பதிவு செய்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கும் என மொத்தம் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


ஆரம்பத்தில் இந்த திட்டம் வெகு வேகமாக நடப்பது போல் தெரிந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 2,581 மின் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த இரு மாதங்களுக்கு ஒரு முறை பணம் கட்டி பயன்படுத்திய விவசாயிகளின் இணைப்புகள், ஓரிரு மின்கம்பங்கள் மட்டும் புதிதாக நட்டு பயன்படுத்தும் இணைப்புகள் ஆகியவை மட்டும் வழங்கப்பட்டன. மற்ற இணைப்புகள் வழங்கப்படவில்லை.


பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளன. மின் கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சோறு வடிக்கிற பானையே காலியாக இருக்கு. அப்புறம் எப்படி அகப்பையில் ஏதாச்சும் வரும் என்று எதிர்பார்க்க முடியும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். வெறும் மின் கம்பத்தை பார்த்து என்ன செய்வது. பம்ப் செட் ஓடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.


பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்த நிலையில், தமிழக முதல்வர் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்ததை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். மின் வாரியத்திலிருந்து வந்த அறிவுறுத்தல் கடிதத்தில் கேட்ட பல்வேறு ஆவணங்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என கூறியிருந்ததால், பல நாட்களாக அலைந்து, திரிந்து ஒப்படைத்தோம். மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து, உடனடியாக மேற்கூரையுடன் கூடிய ஷெட் அமைக்க வேண்டும், வயரிங் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். கடனோடு கடன்... என்று அதற்கும் உடன்பட்டு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஷெட் அமைத்து, வயரிங் பணிகளையும் முடித்து விட்டு காத்திருக்கிறோம்... காத்திருக்கிறோம்... காலம்தான் போகுது என்று நொந்து போய் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.


யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள் அதுபோல் மின்வாரிய ஊழியர்கள் எங்களால் முடிந்தது இதுதான் என்று பல இடங்களில் மின்கம்பங்களை மட்டுமே நட்டுள்ளனர். அதன்பின் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. அந்த மின் கம்பங்களும் 6 மாத காலமாக கண்காட்சி பொருளாக நிற்கிறது. மின்வாரிய அதிகாரிகளை இதுகுறித்து கேட்டால் தற்போது மின்கம்பி உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் எதுவும் கையிருப்பில் இல்லை, வந்ததும் மின் இணைப்பு வழங்குகிறோம்" என்று கையை விரிக்கின்றனர். ஏற்கனவே பல வகையிலும் கடன்பட்டோம். இப்போ மொட்டை மரமாக நிற்கும் மின் கம்பத்தை பார்த்து நொந்து நிற்கிறோம். விவசாயிகளை இப்படியா கஷ்டப்படுத்துவது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.




இதுகுறித்து மின் வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, கஜா புயல் பாதிப்பின் போது வெளி மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு லட்சக்கணக்கான மின் கம்பங்கள் வந்ததால், தற்போது கையிருப்பில் மின் கம்பங்கள் மட்டும்தான் உள்ளன.


மின்கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இப்படி இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும். விவசாயிகளுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை இருக்கிறது. மின்வாரியத்தில் பணிபுரியும் பல ஊழியர்களும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். அதனால் எங்களுக்கும் விவசாயிகளின் வேதனை தெரியாதது இல்லை. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இதனால்தான் மின் இணைப்புகள் வழங்க முடியவில்லை. அதேபோல, மின்மாற்றிகளையும் புதிதாக நிறுவ முடியவில்லை. விவசாயிகள் கண்ணீருடன் பேசும் போது மிகுந்த தர்மசங்கடமாக உள்ளது. நாங்களும் தளவாடப் பொருட்கள் கேட்டு கடிதங்கள் அனுப்பியும் இதுவரை பொருட்கள் கிடைக்கவில்லை என்றனர்.


எது எப்படி இருந்தாலும் வெற்றி விழா என்று ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்று கொண்டாட்டம் நடத்திவிட்டு விவசாயிகளை திண்டாட்டத்தில் விடலாமா? எனவே தஞ்சை மாவட்ட மின்வாரியத்திற்கு தேவையான தளவாட பொருட்களை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொண்டு விரைவில் சொன்னதை செய்ய வேண்டும் அரசு என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண