தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் வரும் 19-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள், தடுப்பு கட்டைகள் அமைத்தல் உட்பட பல பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.



தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வருகிற 19-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகிக்கிறார். திருக்கானூர் பட்டி பங்குதந்தை தேவதாஸ் இக்னேசியர் முன்னிலை வகிக்கிறார்.

ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதா கோவில் தெருவில் வாடிவாசல் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட உள்ளது. இந்த நார்களால் காளைகளும், வீரர்களுக்கும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


இந்த ஜல்லிக்கட்டில் 500க்கும் அதிகமான காளைகள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீரர்கள் யாராவது காயம் அடைந்தால் உடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சிற்கு தனிப்பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.




ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் இருக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது ‌ அதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டுடன் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்ய வேண்டும். பெரிய மாட்டிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆன்லைன் டோக்கன் முறைப்படி வரிசையாக மட்டுமே காளைகள் உள்ளே அனுமதிக்கப்படும்.

 

மாடுபிடி வீரர்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். விழாவிற்கு வருபவர்கள், விழாக்குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு விழாக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர், ஊர் பொது மக்கள் மும்முரமாக செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்ட அளவில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

 

இதில் குறைந்தது 600 காளைகள் பங்கேற்கும். கடந்த ஆண்டு 628 காளைகள் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பீரோ, கட்டில் என ஏராளமான பரிசுகளும் வழங்கப்படும்.

இந்த ஜல்லிகட்டில் பங்கேற்க ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து வருகின்றனர் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.