தஞ்சாவூர்:  கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணன் மகன்களை காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் ராணுவ மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் இறந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற மாவட்ட கலெக்டர் அல்லது உயர் அதிகாரிகள் வராதது உறவினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மகிமை புரம் பூண்டி, புது தெருவை சேர்ந்தவர் அடைக்கலசாமி என்பவரின் மகன் ஆரோன் இளையராஜா (38). இவர் கடந்த 17 ஆண்டுகளாக திருச்சி பட்டாலியனில் (ஹவில்தார்)  ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார்.


இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மதியம் ஆரோன் இளையராஜா தனது மனைவி சுகன்யா, அண்ணன் மகன்கள் ஹாரிஸ் (12) சூர்யா (18) ஆகியோருடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். 


குளித்து கொண்டு இருக்கும் போது ஆற்றில் ஆழமான பகுதியில் அண்ணன் மகன்கள் இறங்கியதை ஆரோன் இளையராஜா கவனிக்கவில்லை. சிறுவர்கள் இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருவரின் கூக்குரலையும் கேட்டு அவர்களை காப்பாற்ற ஆரோன் இளையராஜா முயற்சி செய்துள்ளார். இதில் அவரும் தண்ணீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இருப்பினும், மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்து ஆற்றில் குதித்து மூவரையும் மீட்க முயற்சி செய்துள்ளனர். இதில் ஹாரிஸ், சூர்யா இருவரும் மீட்கப்பட்டனர். ஆனால் ஆரோன் இளையராஜா தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார். 





தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படையினரும், அப்பகுதியில் உள்ள மீனவர்களும் பல மணி நேரம் ஆற்றில் ஆரோன் இளையராஜாவை தேடினர். வெகுநேரத்திற்கு பின்னர் இறந்த நிலையில் ஆரோன் இளையராஜா உடலை மீட்கப்பட்டது. இந்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இறந்த ஆரோன் இளையராஜா உடல் பிரேத பரிசோனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், திருச்சி தலைமை அலுவலக கர்னல் ஷாஜி, டைரக்டர் எக்ஸிக்யூட்டிவ் கர்னல் ராமன் ஆகியோர் தலைமையிலான ராணுவ வீரர்கள், இறந்த ஆரோன் இளையராஜா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில் இறந்த ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா குடும்பத்திற்கு ஆறுதல் கூற மாவட்ட கலெக்டரோ, உயர் அதிகாரிகளோ வராதது உறவினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.