சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு பிறகு, அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்தது. ஆனால் பழனிசாமி சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி தஞ்சாவூருக்கு வந்த சசிகலா, 27 ஆம் தேதி டிடிவி.தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொண்டார். வெறும் பத்து நிமிடம் மட்டுமே மேடையில் இருந்து விட்டு புறப்பட்டு சென்றார். முன்னதாக ஒபிஎஸின் தம்பி ஒ.ராஜா விழாவில் கலந்துகொண்டு, தினகரனிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு, மணமக்களை வாழ்த்தினார்.


தொடர்ந்து, 29 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மீண்டும் தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி விட்டு, தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென சசிகலா ஆலோசனை கூட்டத்தை நடத்தாமல்,  மதியம் 2 மணிக்கு அவரது ஆதரவாளர்களை சிலரை வீட்டுக்கு வரவழைத்தார். அப்போது அவரை சந்திக்க வந்த நபர்களுடன் இரண்டு நிமிடம் பேசியப்படி குரூப்பாக போட்டோ எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார்.




இதில், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள்  வருவார்கள் என சசிகலா எதிர்பார்த்த நிலையில், உள்ளூரில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் கூட வந்து பார்க்காத நிலையில் அதிருப்தியடைந்தார். இருப்பினும் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆதரவாளர்களிடம்,  அதிமுகவை நிச்சயம் கைபற்றுவோம். துவண்டு போக வேண்டாம் என ஊக்கப்படுத்தி  அனுப்பியுள்ளாராம். முன்னதாக புகைப்படம் எடுக்க வரும் ஆதரவாளர்களின் செல்போன், பறிக்கப்பட்டும், அவர்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு உள்ளே அனுப்பட்டார். இதனையறிந்த, சசிகலாவின் தீவிர ஆதரவாளர், ஆய்வு செய்தவரிடம் செல்போனை கொடுத்து விட்டு மற்றொரு செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தார்.


சசிகலா சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைகாட்சியினரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து வரும் 5ஆம் தேதி, இதே போல ஆதரவாளர்களை வீட்டிலேயே சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கூட்டம் குறைவாக வந்ததால், அமமுக மற்றும் அவர்களது சமுதாயத்தினரின் வாட்ஸ் ஆப்பில், புரட்சித்தாய் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள், 1-11-2021, 2-11-2021 மற்றும் 5-11-2021 ஆகிய தேதிகளில்  தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களையும் சந்திக்க உள்ளார்.. இடம் : தஞ்சை அருளாணந்த நகர் இல்லம். நேரம். 2.00 மதியம் என்று வாட்சப்பில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.




இந்நிலையில், அதிமுகவினர் கூறுகையில்,


ஜெயலலிதா இருக்கும் போது, சசிகலா மற்றும் இவர்களது குடும்பத்தினரின் ஆட்டம் அதிகமானதால், ஜெயலலிதாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தினார்கள். இப்போது மீண்டும் அதிமுகவை கைப்பற்ற நினைக்கிறார்கள். உண்மையான அதிமுகவினர் யாரும் சசிகலா பின்னால் செல்லமாட்டார்கள். அவரது சமுதாயத்தினர் மட்டும் செல்வார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிமுக கட்சியின், நிர்வாகிகள்,  தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட அடிப்படை பொறுப்பில் உள்ளவர்களுக்கு, அன்பளிப்பு வழங்குவார்கள்.




ஆனால் இது வரை வழங்கவில்லை. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் தான் உண்மையான அதிமுகவினர் செல்வார்கள். ஒபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியை ஒழிக்க வேண்டும் என்று சசிகலாவை கொண்டு வரபார்க்கின்றார். இதனை எந்த அதிமுக தொண்டனும் விரும்ப வில்லை என்பது நிதர்சனமான உண்மை. இப்போது, சசிகலாவுடன் போட்டோ எடுத்து கொள்ளலாம் என வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்து வருகின்றார்கள். சசிகலா மற்றும் இவரது குடும்பத்தினர் ஆட்சிக்கோ, கட்சியின் அதிகாரத்திற்கோ வந்தால், அவர்களது அருகில் கூட செல்ல முடியாது.  அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னால் அமைச்சருமான ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்தியலிங்கத்தின் நிலைபாடு கேள்வி குறியாக உள்ளது என்றார்.