புத்தாண்டில் முக்கிய விருந்தினர்களை சந்திக்கும் போது, மரியாதை செலு்த்தும் விதமாகவும் அவர்களை கௌரவிக்கவும், பரிசளிக்கவும்

  தஞ்சை சந்தன மாலைகள்  தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டம், தண்டாங்கோரை கிராமத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு வரும் ஜனவரி முதல் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வருடத்தின் முதல் நாள் என்பதால், அன்று பலரும் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, பல்வேறு பொருட்களை நினைவு பரிசாக கொடுப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக வருடத்தின் முதல் நாளில் பெரும்பாலானோர், சந்தன  மாலையை தான் தேர்ந்தெடுத்து அணிவித்து வருகின்றனர்.ஆண்டு முழுவதும் வாடாமல் வதங்காமல், மன வீசுவதோடு இருப்பதால் இந்த சந்தன மாலையை பரிசாக அணிவிக்கும் போது,  மனதோடு, சந்தனத்தின் நனுமனத்தால், ஒருவிதமான பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. மேலும் வீட்டின் அறையில் மாட்டி வைத்தால், அந்த அறை முழுவதும் வாசம் வீசுவதால், மன அமைதி, நிம்மதி ஏற்பட்டு, தொடங்கும் காரியங்கள் நல்லமுறையில் நடைபெறுகின்றது.




பல விதமான மலர்களை கொண்டு மாலை அணிவித்தாலும்,  அந்த மாலைகள் அடுத்த நாள் வாடிவதங்கி விடும். ஆனால், என்றுமே காலத்துக்கும் வாடாமலும், மாறாமலும் , நம்முடைய மனதை போல் இருப்பது இந்த சந்தன மாலை தான்.இத்தகைய சிறப்பு பெற்ற சந்தன மாலை, தஞ்சையை அடுத்த தண்டாங்கோரை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்தினர், சந்தன மாலை தயாரித்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளி நாடுகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.


கடந்தாண்டை விட மூலப்பொருட்களின் விலை ஏற்றதால், சுமார் 100 சதவீதம் விலை உயர்ந்துள்ளது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  சந்தன மாலைகள் செய்து வரும் தண்டாங்கோரை செல்வராஜ் கூறுகையில், ராஜராஜசோழன் காலத்தில் தான் நெல்மணிகளை கொண்டு முதலில் மாலைகள் தயாரிக்கப்பட்டது. இந்த மாலைகளை மன்னன், தான் எங்கு சென்றாலும் கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். தன்னை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு நெல்மணி மாலைகளை  பரிசாக வழங்கி வந்துள்ளார்.




காலப்போக்கில் நம் மண்ணுக்கு வந்த ஆங்கிலேயர்களும் இந்த நெல்மணி மாலை பார்த்து வியந்தனர். நெல்மணிகளை கொண்டு மாலைகளை தயாரித்து தஞ்சாவூர் கைவினைத் தொழிலாளர்கள் பின்னர் மனமனக்கும் ஏலக்காய், சந்தனம் ஆகியவற்றை கொண்டு  விதவிதமான மாலைகளை தொடுத்தனர். விலை குறைவாகவும், பார்க்க பளபளப்பாகவும், நல்ல நறுமனத்தோடும் இந்த மாலைகள் இருந்ததால் சந்தன மாலைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்று தஞ்சாவூரை சுற்றி 50-க்கும் மேற்பட்டவர்கள் சந்தனமாலையை தயாரித்து வந்தாலும், இந்த தொழிலில் மறைமுமாக சுமார் 10 ஆயிரம் பெண்கள் ஈடுபட்டு வருமானத்தை வீட்டில் இருந்தே பெருக்குகின்றனர்.




தஞ்சையை சேர்ந்த எங்களது மூதாதையர் ஒருவர், சந்தன அரைத்த விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார்.அவர் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அரைத்த சந்தனத்தை உருண்டையாக உருட்டி, அதில் கயிறை கோர்த்து மாலையாக்கினார். இது போன்ற சந்தன மாலையை எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது, இந்திராகாந்தி தஞ்சைக்கு வந்த போது, பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு தஞ்சை சந்தன மாலை பெயர் பெற்றது. மேலும், தஞ்சாவூரில் மட்டுமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இதற்கு  தஞ்சாவூர்  சந்தன மாலை என பெற்றது. வெளிநாடு, வெளி மாநில, மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தஞ்சை வரும் போது,கண்டிப்பாக சந்தன மாலைகளை வாங்கி செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.




மேலும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தஞ்சாவூர் மாலைகள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த சந்தன மாலைகள் இரண்டு சரத்தில் தொடங்கி 20 சரம் வரை தொடுக்கப்படும். இந்த சந்தன மாலையின் விலை 100 ரூபாயில் இருந்து  2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. நெல் மணிகளால் தயாரிக்கப்படும் மாலை 15 ஆயிரமும், ஏலக்காய், கிராம்பு போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் தயாரிக்கப்படும் மாலை 10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.