கரிகால சோழன் கட்டிய கல்லணையில் வெண்ணாறு பிரிகின்றது. இதில் தென் பெரம்பூரில், வெண்ணாற்றில் இருந்து வெட்டாறு பிரிந்து கன்டியூர் வழியாக செல்கிறது. வெண்ணாறு பள்ளியக்கிரஹாரம் வழியாக மன்னார்குடி, திருவாரூர், நாகை மாவட்டங்கள் வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் துாரம் சென்று கடலில் கலக்கிறது. வெண்ணாறு ஆற்றில் வரும் தண்ணீர் பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவாயத்திற்கும் பயன்பெற்று வருகிறது. பள்ளியக்கிரஹாரம் வெண்ணாற்றிலிருந்து தஞ்சாவூர் பகுதி முழுவதும் குடிநீர் செல்வதால், சில  ஆண்டுகளுக்கு முன்னால், கூடலுார் வெண்ணாறில் படுகை அணை கட்டப்பட்டது.


இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காலை மற்றும் மாலை நேரங்கள் மட்டுமில்லாமல், பட்டபகலில் சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், மினி லாரிகள், பைக்குகளில் மணல் கொள்ளை ஜரூராக நடைபெறுகின்றது. இதற்காக போலீசார் ஒரு மாட்டு வண்டிக்கு  நன்றாக கவனித்து வருவதால், மணல் கொள்ளையை கண்டுகாணாமல் இருந்து விடுகின்றனர். இது போன்ற அவல நிலையில் படுகை அணை உள்ள வெண்ணாற்றில் சுமார் 10 அடிக்கு மேல் பள்ளம் விழுந்துள்ளது. இதனால் தஞ்சை பகுதிக்கு பிரதான குடிநீர் ஆதாரத்திற்காக பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட படுகை அணை நிலை கேள்வி குறியாகியுள்ளது.




 மேலும் தற்போது சில நாட்களுக்கு முன் தண்ணீர் வந்து குறைத்துள்ளதால், தினந்தோறும் சுமார் 100 மாட்டு வண்டிகள், மின் லாரிகள், பைக்குகளில் மணல் கொள்ளை பட்டப்பகலில் நடைபெறுகின்றது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் ரகசிய தகவல் கொடுத்தும், அவர்கள் கண்டு கொள்ளாமல், அனுமதிக்கின்றனர். வெண்ணாறின் கரையை பலப்டுத்துவதற்காக காங்கீரிட் சுவர்கள் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் மணல் அள்ளி பள்ளமாக இருப்பதால், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கான்கிரீட் சுவர்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.


இதனை அறிந்த பொதுப்பணித்துறையினர், படுகை அணை இருக்கும் பகுதியில் சுமார் 4 முறை  கரையில் வண்டிகள் இறங்காமல் இருப்பதற்காக ராட்ஷத பள்ளங்களை தோண்டி வைத்தனர். ஆனால் மணல் திருடும் கும்பல்களை அந்த பள்ளங்களை மூடி விட்டு, மணலை திருடுகின்றனர். மேலும் பொதுப்பணித்துறையினருக்கு மிரட்டல் வருவதால் வெளியில் சொல்ல முடியாத நிலையில் வேதனையில் இருந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் திருடும் கும்பல்களை, இரும்பு கரம் கொண்டு அடக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பள்ளியக்கிரஹாரம், குலமங்கலம், கூடலுார், எடக்குடி, களக்குடி உள்ள  வெண்ணாற்றின் கரைபகுதியில் மணல் அள்ளக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அவர்கள் மதிக்காமல் போலீசாரை கையில் வைத்து கொண்டு பாதுகாப்பாக மணலை திருடி வருகின்றனர். தினந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட வண்டிகளில் மணலை திருடுவதால், வெண்ணாற்றின் கரையோரங்களில் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் சுவர்களின் நிலை கேள்வி குறியாகி விடும்.


மணல் திருடும் கும்பல்கள் காலை மாலை நேரங்களில் ஆற்றில் வண்டியை வைத்து ஏற்றுவார்கள். பகலில் பெண்கள் ஆற்றில் மணல் முட்டுக்கட்டி வைத்து விடுகிறார்கள். அதனை சிமெண்ட் சாக்கு பையில் நிரப்பி, பைக்கில் கொண்டு செல்கின்றனர். ஒரு மாட்டு வண்டிக்கு 2500, பைக்கில் ஒரு சாக்கு பைக்கு 150 ரூபாய்க்கும் வாடகை வாங்கி விடுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண, மணல் திருடும் கும்பல்களுக்கு அடிபணியாத நேர்மையான அதிகாரியை நியமனம் செய்ததால் தான்,மணல் திருட்டு கும்பலை பிடிக்க முடியும் என்றார்.