நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் மின்சார கம்பிகள் பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால் அவை வலுவிழந்து அறுந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. பல இடங்களிலும் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இது குறித்து மின்சாரத்துறை கண்டுகொள்வதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நாகை அருகே மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிறகாவது மின்சாரத்துறையினர் பழுதடைந்துள்ள மின்கம்பங்களையும், மின்சாரக் கம்பிகளையும் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நாகை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   


         

 

நாகை அருகேயுள்ள அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் பழனிவேல் (55). நாகை மீன்பிடி துறைமுகத்தில் சுமைதூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (48). இவர் கருவாடு உலர்த்தும் பணியாளராக வேலை பார்க்கிறார். மீன்பிடித்தொழில் சார்ந்த வேலையையே இருவரும் செய்வதால் வேலைக்கு ஒன்றாகவே இருவரும் சென்று வருவது வழக்கம்.  தம்பதியினர் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கணவர் பழனிவேல் உணவுக்காக நண்டு வாங்கி கொடுக்க வீட்டுக்குள்ளேயே கொள்ளை புறத்தில் அதை சமைப்பதற்காக ராஜலட்சுமி நண்டுகளை கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களின் வீடு வழியாக சென்று கொண்டிருந்த மின்சாரக் கம்பி திடீரென அறுந்து விழுந்தது.

 

அடுத்த வினாடி அலறல் சத்தத்துடன் அதனை அப்புறப்படுத்த முயன்ற ராஜலெட்சுமியை மின்சாரம் தாக்கியது. மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பழனிவேல் மனைவியை காப்பாற்ற  செய்வதறியாது மின்சாரக்கம்பியை தூக்கிவீச முயன்றார். இதனால் அவரும் மின்சார தாக்குதலுக்குள்ளானார். ஒரு சில நொடிகளில் கணவன்,மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குடும்பத்தினர் ஓடிவந்து வந்து கூக்குரலிட்டு அழுததையடுத்து ஊர்மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது வேலைக்கு செல்லும் போதும்கூட இணை பிரியாமலிருந்த தம்பதியரின் உயிரும் இணைந்தே பிரிந்திருந்தது. இதனால் ஊர் மக்களிடம் சோகம் குடிகொண்டது.

 

சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்தும் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.  உயிரிழந்த தம்பதியினருக்கு, மாதவன், மனோ மற்றும்  ஒரு மகளும் உள்ளனர். தம்பதி உயிரிழப்பிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பொறுப்பேற்க வேண்டுமென்று கூறியுள்ள அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பு மக்கள் உயிரிழந்த தம்பதியினரின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றுவதில் அலட்சியம் காட்டிய மின்துறை அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.