தஞ்சாவூர்:  பள்ளி கட்டடம் மேற்கூரை இடிந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, பி.டி.ஓ.,க்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை ரத்து கோரி, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு, கண்டுக்கொள்ளாத நிலையில் நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே பருத்திக்குடியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கூரை, 'கான்கிரீட்' பெயர்ந்தது. இதில், மூன்றாம் வகுப்பு மாணவர் காயமடைந்தார். இதனால், திருவிடைமருதுார் பி.டி.ஓ., மீது மாவட்ட நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களுடன், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிரச்னையை சுமூகமாக முடித்து தருவதாக, கூடுதல் கலெக்டர் உறுதியளித்தார். இது தொடர்பாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என ஊரக வளர்ச்சி துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நேற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் கூறிய நிலையில், எவ்வித பேச்சுவார்த்தைக்கும் ஊழியர்கள் அழைக்கப்படாத நிலையில், இரண்டாவது நாளாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். போராட்டத்தால், அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெகுவாக சிரமத்தை சந்தித்தனர்.


தஞ்சையில் சமரசநாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் நேற்று சமரசநாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலத்தில் தஞ்சை மாவட்ட சமரச மைய  மாவட்ட தலைவர் நீதிபதி இந்திராணி, ஒருங்கிணைப்பாளர் நீதிபதி தங்கமணி மற்றும் நீதிபதிகள், மீடியேட்டர்கள், வக்கீல் ராஜேஸ்வரன், வக்கீல் சங்க செயலாளர் சசிகுமார், முன்னாள் தலைவர் ஜீவக்குமார் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் சமரசு தீர்வு பற்றியும், சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமசர மையத்தில் நேரடியாக சமசர பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது குறித்தும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்திற்கு அனுப்புவது தொடர்பாக விளக்கி கூறினார். மேலும் இதன் மூலம் உகந்த தீர்வுகளை எட்டுவது குறித்தும், சமரச மையத்தினால் நேரடி பேச்சு வார்த்தைகளில் மனித உறவுகளையும், சமூக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் பேசினர்.

ஊர்வலம் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த வளாகத்தில் இருந்து தொடங்கி ராமநாதன் மருத்துவமனை பஸ் நிறுத்தம் மற்றும் மணிமண்டபம் வழியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சென்றடைந்தது. இதில் மாணவர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட சமரச அமையத்தின் நோடல் அதிகாரி ஆரோக்கியராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.