திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் சிலம்பரசன் என்பவர் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் திருமதிக்குன்னம் அருகே உள்ள காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 35. இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாபாரதி. இவர்களது குழந்தைகள் பார்கவி 5 ஆம் வகுப்பும் யாஷிகா 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்த நிலையில் குடும்ப செலவுக்காக கொரடாச்சேரியை சேர்ந்த துரை என்பவரிடம் சிலம்பரசன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு லட்சம் பணத்தை சிலம்பரசன் திருப்பி கொடுத்த நிலையில் மீதி 50,000 பணம் கொடுக்க வேண்டியிருந்துள்ளது. இந்த  நிலையில் துரை என்பவர் இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டியதால் சிலம்பரசன் குடும்பத்தினருடன்  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். 



 

இதனையடுத்து சிலம்பரசன் மட்டும் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தன் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தீ வைத்துக் கொண்டவர் அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் மாடி வரை ஓடி உள்ளார். உடனடியாக  அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிலம்பரசனின் மனைவி உமா பாரதி கூறுகையில், “என் கணவன் வாங்கிய பணத்தில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டோம் மீதமுள்ள பணத்தை கொடுப்பதற்குள் துரை தினமும் வீட்டிற்கு வந்து எங்களிடம் தகராறு ஈடுபட்டார். இது குறித்து கொரடாச்சேரி காவல்துறையிடம் புகார் அளித்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் காவல்துறையினர் எங்களை மிரட்டியதால் என்னுடைய கணவர் இன்று இந்த முடிவை எடுத்ததார்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.



 

இந்த நிலையில் கொரடாச்சேரி காவல்துறையினர் தற்பொழுது துரையை கைது செய்து அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.