தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் தலைமையில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பணிகள் செயலாக்கம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24ம்  தேதி முதல்  ஆகஸ்ட்  4ம்  தேதி வரையிலும் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்  ஆகஸ்ட் 5 ம்  தேதி முதல் 16ம்  தேதி வரையிலும் நடைபெறும். முதல் கட்டமாக 850 நியாய விலைக்கடைகளிலுள்ள 372506 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாம் கட்டமாக 333 நியாய விலைக்கடைகளிலுள்ள 339264 குடும்ப அட்டைதாரர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும்.


ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியிலும் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று நேரடியாக வழங்கப்படும் எனவும், டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே தொடங்கப்படும் எனவும், முதல் கட்ட முகாம் நடைபெறும். நியாய நிலைக்கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு 23ம்  தேதி வரை வழங்கப்படும்.


இரண்டாம் கட்ட முகாம் நடைபெறும் நியாபநிலைக்கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 4ம்  தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். விண்ணப்பங்களைப் பெறுவதற்காக பொதுமக்கள் நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும்,




விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை குடும்ப அட்டை, மின் கட்டணஇரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்/  விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களின் நகலும் இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்த் துறையில் வருமானச்சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்விதச் சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை. விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். 


விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.


இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள  தொலைபேசி, அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.


முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் திருவையாறு அரசர் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாமில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து வீரசிங்கம்பேட்டை பொது விநியோக நியாய விலைக்கடையில் கடைப்பணியாளர் தங்களது பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு தெருவாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் கலைஞர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தினை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கு விண்ணப்பத்தில் அந்தக் குடும்ப அட்டை எண்ணைக் குறித்து வழங்குவது தொடர்பான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்களுக்கு நியமனம் செய்யப்பட்ட விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் ஒரு நாள் பயிற்சியினை ஆய்வு செய்தார்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷித் ராவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.