மணிப்பூர் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
"பெண்களை வன்முறைக்கான கருவிகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள்"
பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் இது தொடர்பான வீடியோ நேற்றுதான் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து, சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம், முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற விசாரணையின்போது இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய டி. ஒய். சந்திரசூட், "இதை ஏற்று கொள்ளவே முடியாது. வகுப்புவாத கலவரம் நடக்கும் பகுதியில் பெண்களை வன்முறைக்கான கருவிகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அரசியலமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்ததற்கு இதுவே சாட்சி.
வெளிவரும் காணொளிகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அரசு செயல்படவில்லை என்றால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என டி. ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி:
"இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். வன்முறையின் கருவிகளாக பெண்களை பயன்படுத்தியிருப்பது அரசியலமைப்பு மீறல். மனித உரிமை மீறல். அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும்" என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளதாக விளக்கம் அளித்த அவர், "இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன் முடிவு நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும்" என்றார்.
இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் 28ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, "என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்த நாகரீக தேசத்திற்கும் வெட்கக்கேடானது. ஒட்டுமொத்த நாடும் அவமானப்பட்டு விட்டது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்களை வலுப்படுத்துமாறு அனைத்து முதலமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.