தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த பொது விநியோக கண்காணிப்பு குழு கூட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இன்றி செயல்படுவதை கண்காணிக்க தஞ்சாவூர் நகர பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளை ஒரே நேரத்தில் அனைத்து அலுவலர் அடங்கிய குழு ஆய்வு செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுவிநியோக கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் முன்னிலை வகித்தார்.


தேசிய உணவு பாதுகாப்பு சட்டபடியும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் படியும் அமைக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நியாய விலை கடைகளின் விவரம் வகை வாரியான நடப்பு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, வட்ட வாரியான மற்றும் நியாய விலை கடை வாரியான கண்காணிப்பு குழுக்கள் நடத்தப்பட்ட விவரம், அச்சடித்து வரப்பெற்ற புதிய குடும்ப அட்டைகளின் விவரம் மற்றும் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்ட விபரம், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரும் ஆன்லைன் மனுக்கள் நிலுவை விவரம்.


அஞ்சல் வழியில் நகல் மின்னணு குடும்ப அட்டை அனுப்பப்பட்டதற்கான விபரம், ஆன்லைன் புகார்கள் நிலுவை விவரம். பொது விநியோகத்திட்ட அங்காடிகள் செயல்படும் கட்டிடம் விபரம் போன்ற பல்வேறு பொருளடக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கும், புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பகுதிநேர அங்காடிகள் அமைப்பதற்கு துாரத்தினை பரிசீலனை செய்து புதிதாக பகுதி நேர அங்காடிகள் திறப்பதற்கு அரசுக்கு முன் மொழிவுகள் அனுப்புவது. மாவட்டத்தில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள அங்காடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அங்காடி அளவிலான கண்காணிப்புக் குழுக்களை அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள 5085 முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டைகளுக்கும் 139 அன்னபூர்ணா வகை குடும்ப அட்டைகளுக்கும் தற்பொழுது வழங்கப்படும் அரிசியை தவிர இதர பொருள்களையும் வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 


மேலும் பொது விநியோகத்திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இன்றி செயல்படுவதை கண்காணிக்க தஞ்சாவூர் நகர பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளை ஒரே நேரத்தில் அனைத்து அலுவலர் அடங்கிய குழு ஆய்வு செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


இதில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வட்ட வழங்கல் அலுவலர்கள், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்