தஞ்சாவூர்: எந்தெந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு என்னென்ன உபகரணங்கள் தேவை எனத் தெரிவித்தால் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட திட்டக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி கூறினார்.


தஞ்சை மாவட்ட திட்டக் குழு கூட்டம் அதன் தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருமான உஷா புண்ணியமூர்த்தி தலைமையில், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. துணைத் தலைவரும், கலெக்டருமான தீபக்ஜேக்கப், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்கள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி பேசுகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்கள் தேவை என உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். எந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, என்னென்ன உபகரணங்கள் தேவை என எழுதிக் கொடுத்தால், அதுதொடர்பாக அரசுக்கு திட்டக்குழு பரிந்துரை செய்யும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மோசமான கட்டிடங்கள் உள்ளதா? அவ்வாறு இருந்தால் எத்தனை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது என்றார்.


இதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பதில் அளிக்கையில், மோசமான கட்டிடங்கள் இடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் அறிக்கையாக அளிக்கப்படும் என்றார்.


பின்னர் பேசிய கலெக்டர் தீபக்ஜேக்கப், தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய புதுமையான திட்டங்கள் குறித்தும், முன்னுரிமை அடிப்படையில் செய்ய  வேண்டிய பணிகள் குறித்தும் தெரிவிக்கலாம் என்றார்.


கூட்டத்தில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், திட்டக்குழு அலுவலர் ராதாகிருஷ்ணன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், ஒன்றியக்குழு தலைவர்கள் அம்மாபேட்டை கலைச்செல்வன், பூதலூர் கல்லணை செல்லக்கண்ணு, பாபநாசம் சுமதி, திருவிடைமருதூர் சுபா திருநாவுக்கரசு, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் மற்றும் அனைத்து பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் குடிநீர், வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு மாவட்டத் திட்டக்குழு திட்டங்களை வகுத்து மாநில அரசிற்கு வழங்கும். இத்திட்டத்தை செயல்படுத்தும் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்றாகும். ஒரு சில மாநிலங்கள் மாவட்ட திட்டக்குழுவை அமைக்கவில்லை. மாவட்டத் திட்டக் குழுவின் அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும்.


மாவட்டத் திட்டக் குழுவில் கீழ்கண்ட துணைக்குழுக்கள் செயல்படும். அவைகள்: ஊரக வளர்ச்சி துணைக்குழு,  வேளாண்மை வளர்ச்சித் துணைக்குழு, நகர வளர்ச்சி துணைக்குழு, நீர்ப்பாசன வளர்ச்சி துணைக்குழு, பட்டியல் சமூகத்தினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிந்ததோர் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான வளர்ச்சி துணைக்குழு,  வேலைவாய்ப்பு பெருக்குதல் மற்றும் கிடைப்பதற்கான துணை குழு, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துணைக்குழு, கல்வி வள்ர்ச்சிக்கான துணைக்குழு, குடிநீர் வழங்கல் குழு,  சாலை மற்றும் போக்குவரத்து துணைக் குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியை கண்காணிக்கும் குழு ஆகியவை செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.