தஞ்சாவூர்: மேகம் கருத்துச்சு... இடியும் இடிச்சுச்சு... மழையும் பெஞ்சுச்சு. வானிலையே ஊட்டி போல் மாறிடுச்சு. வெக்கையும் மறைஞ்சிடுச்சு என்று தஞ்சை மக்களை குளிர்விக்க இன்று மதியம் வானிலிருந்து போனால் போகிறது என்று இறங்கி வந்த மழையால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில், வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால் மார்ச் மாதத்தில் இருந்தே தஞ்சாவூர் மாவட்டத்தில் வெயில் வறுத்தெடுத்தது. அதுவும் கடந்த சில நாட்களாக வெயில் ஆக்ரோஷம் காட்ட 102 டிகிரியை தாண்டிய வெப்பத்தால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பகலில் தான் வெயிலின் தாக்கம் இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் உச்சத்தை தொட்டுத்தான் காணப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாகவே உச்சந்தலையை பிளக்கும் அளவுக்கு வெயில் வெளுத்தெடுத்தது. பகல் நேரத்தில் தெருவில் இறங்கி நடக்கவே பொதுமக்கள் அச்சப்பட்டனர். வேலை காரணமாக வெளியே சென்று தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே சென்றார்கள். அப்படி வெளியே செல்பவர்கள் குடையில்லாமல் செல்வதில்லை. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் மூடிக் கொண்டும் சென்று வந்தனர்.
வெயிலின் தாக்கம் குறைவாக அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் தஞ்சை மாநகரில் சாலையோரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த இளநீர், தர்ப்பூசணி, கரும்பு ஜூஸ் கடைகளில் விற்பனை களை கட்டியது.
குளிர்பான கடைகளிலும், பழச்சாறு, குளிர்பானங்கள் அருந்த மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தினால் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் விலைதான் உச்சத்தை தொட்டுள்ளது. இப்படி வெயிலோடு உறவாடி, இரவில் தூக்கமின்றி திண்டாடி வந்த மக்களை குளிர்விக்க இன்று மதியம் மேகம் கருக்க, இடி மத்தளம் வாசிக்க படபடவென்று ஆரம்பத்தில் வேகம் காட்டி பெய்ய ஆரம்பித்த மழை பின்னர் மிதமான மழையாக மாறியது.
இந்த மழையால் சட்டென்று வெப்பம் தணிந்தது என்றால் மிகையில்லை. கானல் நீர் தெரிந்த சாலைகளில் உண்மையிலேயே மழை நீர் தெறித்தது. மதியம் 12 முதல் 3 மணிவரை வெளியில் நடமாடாத மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் அரைமணிநேரம் என்றாலும் இந்த மழை தஞ்சையை குளிர்வித்தது என்பதுதான் உண்மை, கிளைமேட்டையே மாற்றி போட்ட இந்த மழையால் மக்கள் ஹேப்பி அண்ணாச்சிதான் போங்க. ஒரு சில பகுதிகளில் வானிலையே மாறி இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. பலமான காற்று வீசியதால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.