தஞ்சாவூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, கொட்டும் மழையில் மூழ்கிய விளைநிலத்தில் விவசாயிகள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே நரசிங்கமங்கலம் பகுதியில் நாற்று  நடவு செய்து 40 நாட்களே ஆன இளம் பயிர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் மூழ்கியுள்ளது.


தொடர்ந்து மழை நீரில் மூழ்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கொட்டும் மழையில் மூழ்கிய விளைநிலத்தில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்,  கடந்த முறை பெய்த மழையால் நாற்று நடவு செய்த பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டது. அதனை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் இரண்டாவது முறையாக நடவு செய்தோம். இந்த பயிர்களும் நீரில் மூழ்கி விட்டது. கடந்த முறை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒரே பருவத்தில் இரண்டு முறை சுமார் 60 ஆயிரம் வரை செலவு செய்த செய்துள்ளோம்.


எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 


தஞ்சை அருகே கணபதி அக்ரஹாரம் கும்பகோணம் சாலையில் கனமழையால் பழமையான மாமரம் சாய்ந்து விழுந்தது. தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அருகே கணபதி அக்ரகாரம் பகுதியில்  கனமழையால் பழமை வாய்த்த மாமரம்  ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.


அந்த நேரத்தில் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் மின் கம்பங்கள் மீது மாமரம் விழுந்தால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விழுந்த மாமரம் வெட்டி அகற்றி மின் வினியோகத்தை சீராக்கும் பணி நடைபெற்றது.