தண்ணீரில் வாழைக்கன்றுகள்... கண்ணீரில் விவசாயிகள்: 25 லட்சம் வாழை இலைகள் ஏற்றுமதி முடக்கம்

பல மாவட்டங்களுக்கு சுமார் 25 லட்சம் வாழை இலைகள் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது பெய்து வரும் மழையால் வாழையிலை ஏற்றுமதி முற்றிலும் பாதிப்படைந்துள்ளது,

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் இளம் வாழை பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிற மாவட்டங்களுக்கு தினமும் செல்லும் 25 லட்சம் வாழை இலைகளும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 ஏக்கரில் வாழை சாகுபடி நடைபெறுவது வழக்கம். திருவையாறு அடுத்த வடுகக்குடி, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, திருப்பந்துருத்தி, நடுக்காவேரி,  நடுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவையாறு பகுதிகளில் ஆடிப்பட்டமாக வாழை சாகுபடி நடைபெற்றது. இதற்கான அறுவடைகள் சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. எனவே தற்போது பெய்த மழையில் இளம் வாழை கன்றுகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வாழைப்பயிர்கள் அழுகும் நிலை உள்ளது.

தினமும் திருவையாறு பகுதியில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை, நாகை, திருவாரூர், தஞ்சை நகர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சுமார் 25 லட்சம் வாழை இலைகள் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது பெய்து வரும் மழையால் வாழையிலை ஏற்றுமதி முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் வாழை விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். எனவே வாழை பாதிப்பு குறித்து வேளாண்மை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வாழை இலைகள் ஏற்றுமதி இல்லாததால் இதை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து வடுகக்குபடி பகுதியை சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் கூறுகையில்,  நாங்கள் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து வாழை சாகுபடி செய்து வருகிறோம். நாங்கள் வாழையை சாகுபடியே பிரதான தொழிலாக செய்து வருகிறோம். நெல்லோ அல்லது வேறு சாகுபடியோ  மேற் கொள்வதில்லை. இங்கு சுமார் நூறு குடும்பங்களில் 500க்கும் மேற்பட்ட வாழை தொழிலாளர்கள் உள்ளனர். திருவையாறில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாழை இலை, வாழைக்காய், வாழைப்பழம், வாழைப்பூ, வாழை நார் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறோம்.

திருவையாறு வாழை இலை என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு. அதனால்தான் இந்த பகுதியில் இருந்து சுமார் 25 லட்சம் வாழை இலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் வாழை கன்றுகள் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையில் மூழ்கியுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலையில் உள்ளது. மழை தொடர்ந்தால் வாழையில் வேர் கருகல் நோய் ஏற்படும். ஏற்கனவே புயல், மழையால் பலமுறை பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் இப்போதும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். வாழை விவசாயிகளும், தொழிலாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் இந்த வருமானத்தை வைத்துதான் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தை நடத்துகின்றனர். இந்த தொடர் மழையால் அவர்களும் வெகுவாக பாதிக்கப்படடுள்ளனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Continues below advertisement