தஞ்சாவூர்: ரெயில்களில் முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு பணமாக பெறப்படமாட்டாது. டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யுங்கள் என்ற அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் இருந்தும் முதியவர்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
டிக்கெட் முன்பதிவுக்கு பணம்
தஞ்சை ரெயில் நிலையம் பழமையான ரெயில் நிலையம் ஆகும். தஞ்சை வழியாக 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 15-க்கும் அதிகமான பயணிகள் ரெயில்கள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உட்பட பல்வேறு இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். முன்பெல்லாம் முன்பதிவு செய்வதற்கு பயணிகள் நேரில் ரெயில் நிலையத்துக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்று வந்தனர்.
இணைய வசதி அதிகரிப்பால் அவதி
இந்த வழக்கம் நாளடைவில் இணைய வசதி அதிகரித்ததால் ஆன்லைன் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் ரெயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு அதற்கான தொகையை செலுத்தி பெற்று வந்தனர். ஆனால் தற்போது முன்பதிவு செய்வதற்கு டிஜிட்டல் மூலம் மட்டுமே பணம் பெறப்படுகிறது. நேரடியாக தொகை பெறப்படுவது இல்லை. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஏ.டி.எம். கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ஜிபே, போன்பே, பேடி.எம். போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மட்டுமே டிக்கெட்
இது தொடர்பான அறிவிப்பும் முன்பதிவு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய வருபர்கள் ஜிபே, போன்பே, பேடிஎம் மூலமும் ஏ.டி.எம். கார்டு மூலமும பணம் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து செல்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தை சுற்றிலும் ஏராளமான கிராமப்பகுதிகள் உள்ளன. இதில் உள்ளவர்கள் அனைவரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்பவர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள்
இதனால் பல பயணிகள் டிக்கெட் எடுக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. அவர்கள் முன்பதிவு டிக்கெட்டுக்கான பணத்தை கையில் வைத்துக்கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விட்டு பணத்தை கொடுக்கிறார்கள். ஆனால் பணத்தை நேரடியாக பெறாமல், டிஜிட்டல் பணப்பரிர்த்தனை மட்டுமே அனுமதிப்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.
கிராமப்புறத்தில் இருந்து வருபவர்களின் நிலை
கிராமப்புறத்தில் இருந்து வரும் முதியவர்கள் இதனால் அருகில் உள்ள இணைய சேவை மையத்தில் தங்கள் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த கூடுதல் கட்டணம் கொடுக்கும் நிலை உள்ளது. இருப்பினும் ஜிபே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகள் பல நேரங்களில் சரியாக இயங்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிலர் பணத்தை அருகில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று தங்களது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வந்து பிறகு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு செல்கிறார்கள்.
ஆனால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்கு பணமாக பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் பெரும்பாலான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.