தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கையில் மண்சட்டி ஏந்தி பொதுமக்களிடம் யாசகம் பெறும் நூதன போராட்டம் நடைபெற்றது.



போராட்டத்துக்கு கூட்டமைப்பு மாநிலத் தலைவர்  பிரபு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தயாளன், மாநில துணைச் செயலாளர் பாரதி, மாநில துணைப் பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவ கால பணியாளர்களாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு எடையிழப்பு எனக் கூறி லட்சகணக்கில் அபராதம் விதித்ததை நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்யாமல் எடை இழப்பு எனக்கூறி கொள்முதல் பணியாளர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் மீண்டும் பணிபுரிய வாய்ப்புகள் வழங்க வேண்டும். இயக்கம் செய்யாத கொள்முதல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் உயர் அதிகாரிகள் முறைகேடாக கட்டாய பண வசூலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சேமிப்புக் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்ட நெல் இறங்கிய மறுநாள் சம்மந்தப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

கொள்முதல் பணிக்குத் தேவையான எழுது பொருட்களை நிர்வாகமே உரிய நேரத்தில் வழங்க வேண்டும். பருவகால பணியாளர்களின் சம்பளத்தை பிரதி மாதம் 1- ம் தேதியிலிருந்து 10-ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். சேமிப்புக் கிடங்குகளில் எடைப் பாலத்தை கண்காணிக்க கண்காணிப்புக் கருவிகளை பொருத்த வேண்டும். தற்காலிக பணியாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு எடைப்பாலத்தில் முறைகேடு செய்து எடையிழப்பை ஏற்படுத்தும் சில தர ஆய்வாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கையில் மண்சட்டி ஏந்தி பொதுமக்களிடம் யாசகம் பெறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.