மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும், ஒட்டுமொத்த விவசாய நிலங்களை அழித்துவிட்டு வீராணம் பாசன பகுதிகளில் வீராணம்  ப்ராஜெக்ட் என்ற பெயரில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கு திறந்தவெளி சுரங்கம் அமைக்கும் வகையில் முதல் கட்ட ஆய்வை மத்திய அரசின் மினரல்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனம் துவங்கி உள்ளது. எனவே இதனை தமிழ்நாடு அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. 




அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன், “மத்திய அரசின் எம்.இ.சி.எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்ட மண்டலமான காட்டுமன்னார்கோயில், குமராட்சி, மேலபுவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் முதல் கட்ட ஆய்வு நடத்தியுள்ளது இது சட்டத்திற்கு புறம்பானதாகும். இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட வீராணம் ஏரி முற்றிலும் அழிவதுடன் அதனை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். மேலும், விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு வலுவான சட்டம் இயற்றி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.




மயிலாடுதுறையில் உள்ள முத்தூட் பின்கார்ப்  நிறுவனத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் - நிதிக்கடன், மகளிர் சுய உதவி குழுக்கடன் என்ற பெயரில் கிராமப்புற மக்களிடம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2020 -ஆம் ஆண்டு ஸ்ரீகண்டபுரத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்மணி இரண்டே கால் சவரன் தங்க நகையை அடமானம் வைத்து, 50,000 ரூபாய் நுண்நிதிக் கடன் பெற்றுள்ளார். இதனை 24 மாதத் தவணையாக 2600 ரூபாய் வீதம் திரும்பச் செலுத்துவதாக பணம் பெற்ற நிலையில், 11 மாதங்கள் வரை தவணைத் தொகையை சரியாக செலுத்தியுள்ளார். 




கொரோனா பொதுமுடக்கம் காரணமாக 12 -வது மாதத் தவணையை செலுத்த சற்று தாமதமானதால் அவரது நகை ஏலம் விடப்பட்டுவிட்டதாக நிதிநிறுவனத்தினர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பலமுறை நகையை திரும்பக் கேட்டும் திருப்பித் தராததால், அந்த பெண்மணிக்கு நியாயம் கேட்டு, அந்நிறுவனத்தின் முன்பு, இந்த நிறுவனத்தினர் நுண்ணிதிக்கடன் என்ற பெயரிலும் மகளிர் சுய உதவி குழு கடன் என்ற பெயரிலும் கிராமப்புற மக்களிடம் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி நிறுவனத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிதி நிறுவனத்தை கண்டித்து பல்வேறு பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர். நிறுவனத்தை கண்டித்தும், இந்நிறுவனம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.