தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் கோவிந்தநாட்டுச்சேரி மற்றும் வீரமாங்குடியிலும், திருவையாறு தாலுக்காவில் மருவூர் மற்றும் சாத்தனுாரில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் சுரங்கவியல் சார்பில் தடையினை சான்று வழங்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் லாரிகள், கனரக வாகனங்களில் மட்டும் மணல் எடுத்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


இதனால் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மணல் மாட்டு  வண்டி தொழிலாளர்கள், சிஐடியூ தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் உரியபதில் வழங்காமல் காலத்தை நீடித்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு  சிஐடியூ தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.




இப்போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், கைலாசம், லட்சுமணன், செந்தில்குமார், சோமசுந்தரம், மூர்த்தி, அலெக்சாண்டர், நாகராஜன், ரமேஷ், இமானுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்  மற்றும் அவர்களது குடும்பத்தார்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, மணல் மாட்டுக்கான குவாரியை திறக்க வேண்டும், தற்போது திறக்கப்படவுள்ள குவாரிகளில் மாட்டு வண்டிகளிலும் மணல் அள்ள அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில்,கொரோனா தொற்று ஊரடங்கிற்கால் தற்காலிகமாக மூடப்பட்ட மாட்டு வண்டிக்கான  மணல் குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த கொத்தங்கடி, திருச்சென்ணம்பூண்டி, பட்டுக்கோட்டை அக்னி ஆறு சின்ன ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவாரிகளை ஊரடங்கை தளர்த்தி, உடனடியாக திறக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் சுற்றுசூழல் மாசுக்கட்டுப்பாடு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாபநாசம், திருவையாறு தாலுக்காவில் திறக்கப்படவுள்ள குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதியளிக்க வேண்டும்.லாரிகளில் மணல் எடுப்பதை கைவிட வேண்டும். திருவிடைமருதுார் தாலுக்கா முள்ளங்குடி, பாபநாசம் தாலுக்கா நடுப்படுகை, பட்டுக்கோட்டை தாலுக்கா தொக்காளிக்காடு, பேராவூரணி தாலுக்காவில் பெத்தநாச்சிவயல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மணல் குவாரிகளில் மணல் மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்.


மணல் தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றார்கள். பரம்பரையாக செய்த வந்த தொழில் நடைபெறாததால், 50 சதவீதம் மாட்டு வண்டிகளையும், மாடுகளை சொற்ப விலைக்கு விற்பனை செய்து விட்டு, மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டார்கள்.  தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தஞ்சைக்கு வந்துள்ளநிலையில் அவரது பார்வைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட தமிழக முதல்வர் தலையிட்டு எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.