திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சி நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாநிலத்தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 

தஞ்சாவூருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சரை பாஜக சார்பில் வரவேற்கிறோம். எந்த முறையில் வரவேற்கிறோம் என்றால் தஞ்சாவூருக்கு முதல்வர் வருகை தந்ததால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தரப்பட்டுள்ளது, பல ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் தற்பொழுது புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமலும், அரசின் சார்பில் உதவிக்காக காத்திருந்தவர்களுக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் சார்பில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

 

அந்த அடிப்படையில் நாங்கள் வரவேற்கிறோம். ஒவ்வொரு பகுதிக்கும் முதலமைச்சர் வருகை தந்தால் அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் முதலமைச்சர் வருகையின் காரணமாக மேம்படுத்தி தரப்படும் சாலைகள் சீர் செய்யப்படும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் அப்படி என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் வந்தால் மட்டுமே பணிகள் நடைபெறும் இல்லை என்றால் நடைபெறாது என்ற சூழ்நிலை தற்போது உள்ளது அந்த அடிப்படையில் முதலமைச்சரை நாங்கள் வரவேற்கிறோம்.

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது அனைவரும் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் படுகொலைகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அடுத்ததாக கடந்த ஏழு மாத கால திமுக ஆட்சியில் கடந்த ஆட்சியை விட பல மடங்கு போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் விற்பனை நடை பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறுகிறார்கள், அதே நேரத்தில் கஞ்சா மட்டுமல்ல பல போதைப் பொருட்கள் விற்பனையாகும் சூழ்நிலை தமிழகம் முழுவதும் உருவாகி உள்ளது. குறிப்பாக கடற்கரை ஒட்டி உள்ள மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டும், போதைப் பொருட்கள் விற்பனையை கடுமையான நடவடிக்கை மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.



 

நாடு முழுவதும் ஒமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 15 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக பாரதப்பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுப்பது பற்றிய கேள்விக்கு, ஒரு சில வழக்குகளில் உண்மை இருக்கலாம் அதே நேரத்தில் அதிகபட்சமாக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த அரசாங்கம் வழக்கு போடும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் அரசாங்கம் உண்மையான குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அரசு வழக்குத் தொடுத்தால் அதனை நேரடியாக இருந்து சந்திக்க வேண்டுமே தவிர முன்னாள் அமைச்சர் வழக்கிற்கு பயந்து தலைமறைவாகி இருப்பது சரியானது அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து.

 



 

தமிழக அரசு மத்திய அரசிடம் தமிழக மக்களுக்காக கேட்கக்கூடிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. எப்படி இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் இதுவரை திமுக போராடிக்கொண்டிருந்ததோ பாஜகவும் இந்தித் திணிப்பிற்கு எதிராக போராடும் என தெரிவித்துள்ளது.

 

முன்னதாக பிரதமர் தமிழகத்திற்கு வரும் பொழுது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தது அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்தார்கள் இதே போன்று மக்களை திசைதிருப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நேரத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக திமுகவினர் பிரதமரை எதிர்ப்பு தெரிவித்தார்கள் தவிர உண்மையான காரணம் எதுவும் இல்லை. இன்று திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது பிரதமரை வரவேற்க வேண்டியது தமிழக மக்களின் கடமை முதலமைச்சரின் கடமை அந்தக் கடமையின் அடிப்படையில் தமிழக முதல்வர் வரவேற்கிறார்கள் என பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.