நெல் கொள்முதலில் சுமார் 450 கோடியை

  விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி,  பகல் கொள்ளையும்,  லஞ்ச பிச்சையையும் செய்யப்பட்டு வருவதை தடுத்திட மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு மற்றும் சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் விவசாயிகள் பதாகைகளில் பட்டை நாமம்  வரைந்து நூதன முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத வகையில், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள், விற்பனை செய்வதற்கு குவிண்டாலுக்கு 120 ரூபாயில் இருந்து 130 ரூபாய் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கட்டாயமாக வழிப்பறியாகவும், பகல் கொள்ளையாகவும் மோசடியாக நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வரம்பு மீறி தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்தாண்டும் குறுவை கொள் முதலிலும், கடந்த ஆண்டுகளைப் போல தொடருவதோடு, லஞ்சப்பிச்சையின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.




இது போன்ற அவல நிலை, தமிழக முதல்வருக்கு,  புலனாய்வு துறையின் மூலம் தங்களின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டிருக்கும்,  கொண்டு வரப்பட்டு இருத்தல் வேண்டும். கடந்த கால ஆட்சி நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என்ற மிகக் கேவலமான நடைமுறை இருந்தது. இதனை தமிழக முதல்வர் பலமுறை சுட்டிக்காட்டி பேசியதோடு, தற்போதுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம் இதுபோன்ற தவறுகளை செய்யாது, என்ற வாக்குறுதியை அளித்திருந்தார். இத்தகைய லஞ்ச பிச்சை மோசடி முறைகேடுகளை தொடர்வதோடு மட்டுமில்லாமல், அதிகரித்து வருகின்றன.


ஒவ்வொரு ஆண்டு நெல் கொள் பருவத்தில்,  கொள்முதலுக்கும்,  இந்திய உணவு கழகத்தில் இருந்தும்,  மத்திய அரசிட, இருந்தும் தேவையான பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை பெற்று தான் நம் தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழக அரசு  விவசாயிகளின் நலன் கருதி அளிக்கின்ற மிகக் குறைவான ஊக்கத்தொகையும், அதைவிடக் கூடுதலாகவும், விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி,  பகல் கொள்ளை அடிப்பது எவ்விதத்தில் நியாயமாகும்.



இத்தகைய லஞ்சம் தரை தளம் முதல் தலைமைச் செயலகம் வரை பங்கு போடுவதற்கு தான் என்று கட்டாயப்படுத்த படுவதை,  மாநில, மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை ஏன் கண்டுகொள்வதில்லை என்ற கேள்வி விவசாயிகளிடம் பின் தொடர்ந்து இருந்து வருகிறது. மத்திய அரசின் நிதியை கொண்டு நெல்கொள் முதல் நடைபெறுவதில் ஏற்படும் முறைகேடு மோசடிகளை சிபிஐ கண்டுணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணம் தாலுக்கா ஏராகரம் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள் முதல் நிலையத்தில்,  இனியும்  விவசாயிகளை  ஏமாற்றி லஞ்சம் முறைகேடுகள் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி, விவசாயிகள் பதாதைகளில் பட்டை நாமத்தை வரைந்து நுாதன முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து உலகில் அனைத்து உயிரினங்களும் நஞ்சில்லா உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று தனது உயிர் மூச்சு உள்ளவரை  விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்தி சென்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மத்திய அரசு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தபால் தலைவெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு விவசாயி தங்கையன் தலைமை வகித்தார் விவசாயிகள் மோகனாம்பாள் புவனேஸ்வரி முன்வைத்தனர் செயலாளர் சுவாமிநாதன் கண்டன உரையாற்றினார்.