தஞ்சாவூரில் தனியார் பேருந்து நிறுவனத்தில் ரூ.400 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகார் செய்தனர். இதையடுத்து அந்நிறுவனத்துக்கு சொந்தமான 35 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் அந்நிறுவனத்தின் பெயரில் இயங்கும் 119 வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் தஞ்சாவூர் மாவட்டம்  அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதியில் தனியார் பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்கி வந்தார். தங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் லாபத்தொகை வழங்குவதாக அறிவித்தார்.  

அதன்படி இந்நிறுவனத்தில் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். வெளிநாட்டில் இருந்தவர்களும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கமாலுதீன் இறந்துவிட்டார். மேலும், பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு லாபத் தொகை உள்ளிட்ட முதலீடுத் தொகை ஏதும் திருப்பி வழங்கப்படவில்லை.

இதனால் பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனியார் பேருந்து நிறுவனம் ரூ. 400 கோடி வரை மோசடி செய்ததாக இதுவரை 6, 380 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் இந்நிறுவனத்துக்கு சொந்தமானதும், கமாலுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்ட 154 வாகனங்களில் இதுவரை 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ள 119 வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமாலுதீன் என்பவர் தனியார் பேருந்து நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த முதலீடு பணத்தின் மூலம் ஆம்னி பேருந்துகள், நகர, புறநகர் பேருந்துகள், மினி பேருந்துகள், சொகுசு கார்கள், சுற்றுலா வாகனங்கள் என கமாலுதீன், அவரது குடும்பத்தினர் ரேஹானாபேம், அப்துல்கனி, அப்துல்ரஹ்மான் ஆகியோரது பெயர்களில் 154 வாகனங்கள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இதுவரை 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

மேலும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வாகனங்கள் இயங்குவது தெரிய வந்துள்ளது. மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்ய சட்டத்தில் அதிகாரம் இருப்பதால், இந்த வாகனங்களை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இந்த வாகனங்கள் யார் வைத்திருந்தாலும் சட்டப்படி தவறாகும். விரைவில் இந்த வாகனங்கள் மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.




பைக் திருட்டு




தஞ்சையில் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (42). இவர் அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். வளாகம் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு தனது கடைக்கு சென்று உள்ளார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு புறப்பட்டார். பைக் எடுக்க வந்தபோது அதை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.