தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை போல் பைக் வீலிங் மற்றும் சாகசம் என்ற பெயரில் சில வாலிபர்கள் பைக்கில் அதிவேகத்தில் சென்று பொதுமக்களை மிரள விட்டனர். இதுகுறித்த வீடியோ வைரலானது. இந்த வாலிபர்கள் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கி அவர்களை பிடித்து போக்குவரத்து பிரிவு போலீசார் அபராதம் விதித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியையும் தந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் வருங்காலத்தில் பைக் ரேசராக வர வேண்டும் என்ற கனவில் மிதக்கின்றனர். இளைஞர்கள் தற்போது பைக் ரேஸ் பயிற்சிகளுடன், ஸ்கீம் பைக் மற்றும் ஒற்றை சக்கரத்தில் வீலிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சரியான முறையில் பயிற்சிக்கு செல்லாமல், தஞ்சை பைபாஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் மாலை நேரங்களில் மோட்டார் சைக்கிள்களை கொண்டு ஒற்றை சக்கரத்தில் வீலிங் செய்வது போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஒட்டுனர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இவர்களில் பலர் தலைக்கவசம் கூட அணிவது இல்லை. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவின்பேரில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் பைபாஸ் சாலையில் சாகசம் செய்த 5 வாலிபர்களை பிடித்தனர். இவர்களுக்கு விபத்தில் கை, கால்களை இழந்து சிகிச்சை பெறும் நோயாளிகளை பற்றிய வீடியோவை காண்பித்து, நீங்களும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள் என போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி. ரவிச்சந்திரன் ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து தஞ்சை அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருடன் இணைந்து இந்த 5 வாலிபர்களும் ஈடுபட செய்தார். பின்னர் அவர்களிடம் இனிமேல் மோட்டார் சைக்கிளில் சாகச முயற்சிகளில் ஈடுபடமாட்டோம் என வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்கள் 5 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
விபரீதத்தை அறியாமல் பைக்கில் வீலிங் செய்யும் போது தவறி விழுந்தால் கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். பல இடங்களில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் தவறி விழுந்து உயிரையும் இழந்துள்ளனர். இதனால் இவர்களை நம்பியுள்ள பெற்றோர் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதன் விபரீதம் அறியாமல் இளமை வேகத்தில் செய்துவிட்டு பின்னர் அவதியடைகின்றனர். இதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டாலும் பொறுப்பற்று நடக்கின்றனர். இனியும் இதுபோல் வீலிங் சாகசம் செய்வது தெரிய வந்தால் கைதாகி சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
தஞ்சையில் வீலிங் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை விதித்த போலீசார்..
என்.நாகராஜன்
Updated at:
24 Oct 2022 05:43 PM (IST)
தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை போல் பைக் வீலிங் மற்றும் சாகசம் என்ற பெயரில் சில வாலிபர்கள் பைக்கில் அதிவேகத்தில் சென்று பொதுமக்களை மிரள விட்டனர்.
பைக் வீலிங் சாகசம் செய்யும் இளைஞர்கள் (மாதிரி படம்)
NEXT
PREV
Published at:
24 Oct 2022 05:43 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -