தஞ்சை பூக்கார தெருவில் அமைந்துள்ளது பூச்சந்தை. திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இங்குள்ள பூக்கடைகளுக்கு தினமும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக வருகிறது.


அதேபோல் இங்கிருந்தும் வெளி மாவட்டங்களுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும். தற்போது தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் வரத்து குறைவாக இருந்தது. இதனால் சில நாட்களாக பூக்களின் விலை சற்று உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.


தீபாவளிக்கு பூக்களின் தேவை அதிகம் என்பதால் அதன் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.  நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று அதன் விலை இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையானது. மேலும் முல்லைப் பூ விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து, கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் ரூ.1500, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.200-க்கும் விற்பனையானது. விலை அதிகமாக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் பூக்களை உற்சாகத்துடன் வாங்கி சென்றனர். இதனால் பூச்சந்தையில் வழக்கத்தை விட மக்கள் நெரிசல் அதிகம் இருந்தது.


பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மழையின் காரணமாக வரத்தும் குறைந்து இருந்தது. இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்களும் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றனர்.




பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்னவோ உண்மைதான். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளியை சரியாக கொண்டாட முடியாத நிலை. காரணம் கொரோனா ஊரடங்கால் பொருளாதாரத்தில் மிகவும் சரிவை சந்தித்து இருந்தோம். தற்போது கட்டுப்பாடுகள் தளர்ந்து ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. தீபாவளி மற்றும் அமாவாசை என்பதால் பூக்கள் விலை உயர்ந்து இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி செல்கிறோம். மல்லிகை மற்றும் முல்லைப்பூ விலை உயர்ந்துள்ளது என்றனர்.


பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்து காணப்பட்டது. நாளை தீபாவளி என்பதால் வியாபாரிகள் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விட்டு வீட்டுக்கு புறப்படுவோம் என்ற மனநிலையில் காய்கறிகளின் விலையை குறைத்து விற்பனை செய்தனர்.