தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயிலடி, காந்திஜி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் ஓராண்டில் திருட்டு போன மற்றும் தவறவிடப்பட்ட  செல்போன்கள் குறித்து போலீசாருக்கு உரிய ஆதாரங்களுடன் புகார்கள் வந்தன. இதையடுத்த மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், மாவட்ட எஸ்.பி., ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவுப்படி, நகர டி.எஸ்.பி., ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து தேடினர். இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்த செல்போன்கள் பயன்பாட்டில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 50 கைப்பேசிகளையும் போலீசார் மீட்டனர்.




இவற்றை மேற்கு காவல் நிலையத்தில் உரியவர்களிடம் நகர டிஎஸ்பி ராஜா ஒப்படைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

செல்போன்களை எப்போதும் ரசீதுடன் வாங்க வேண்டும். இதன் மூலம், காணாமல் போனாலோ, வழிப்பறி செய்யப்பட்டாலோ, தவறவிட்டாலோ உடனடியாக உரிய ஆதரங்களுடன் புகார் அளித்தால், அதை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் மீட்க முடியும். குறைந்த விலையில் கிடைப்பதாக நம்பி ரசீது இல்லாமலோ, மற்றவர்களின் செல்போன்களையோ வாங்கி ஏமாந்துவிட வேண்டாம். அவை திருட்டு செல்போன்களாகக் கூட இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குருசாமி, பழனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் அளவிலான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில், பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்துபவர்கள், அதனை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் டிஎஸ்பி., சரவணன் உத்தரவுப்படி,, இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பட்டுக்கோட்டை அருகே ஒரு இடத்தில் பண்ணையில் இறால்களுக்கு தீவனமாக பயன்படுத்துவதற்காக சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.