அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தால் எங்கள் குழந்தைகள் மிகுந்த பயன் பெற்று வருகின்றனர். 



தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முன்னோடி திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:

தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப்பள்ளியில் பயிலும் 375 மாணவ- மாணவியர்களுக்கு திங்கட்கிழமை தோறும் சேமியா, உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் , செவ்வாய்க்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக சேமியா கேசரியும், வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளியில் பயிலும் 1067 மாணவ -மாணவியர்களுக்கும் திங்கட்கிழமை தோறும் ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் கோதுமை ரவை உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ -மாணவியர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்.






தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கூட்டுறவு மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி காலனி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபுசிவகுருநான் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ,மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல், ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் தரப்பில் கூறுகையில், ”தஞ்சாவூர் கூட்டுறவு காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறோம். தினமும் பள்ளியில் வழங்கப்படுகின்ற காலை உணவினை விரும்பி சாப்பிடுகின்றோம். சில சமயங்களில் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்ற சூழ்நிலை இப்போது முழுவதுமாக மாறிவிட்டது. தினமும் காலையில் வழங்கப்படும் சூடான உணவு வகைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இத்தகைய காலை உணவு திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு நன்றி” என்று தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், “தினமும் கூலி வேலைக்கு செல்கிறோம். சில நேரங்களில் வேலைக்கு கால தாமதம் ஆகி விடும் என்பதால் சமைக்க முடிவதில்லை. குழந்தைகள் பழைய உணவினை சாப்பிட்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். இப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் எங்கள் குழந்தைகள் தினமும் காலை உணவை பள்ளியில் சூடாக சாப்பிடுகின்றனர். இது எங்களைப் போன்ற பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வருக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.