குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கான நேர்முக விளக்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:


காவல் நிலையத்துக்கு வருவதற்கு குழந்தைகள் யாரும் அச்சப்படக் கூடாது. குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படும்போது, அவர்களுக்கு உதவி செய்வதற்குத்தான் காவல் துறையினர் உள்ளனர். குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்து கொள்ள முயன்றாலோ, தொந்தரவு செய்தாலோ காவல் துறையினரிடம் அச்சமின்றி புகார் செய்யலாம்.


குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் காவல் துறையினரை அணுகலாம். குழந்தைகளுக்கு காவல் துறையினர் நண்பர்களாக இருந்து உதவி செய்து, ஆதரவும் கொடுப்பர். மேலும், காவல் துறை தொடர்பாக எந்தச் சந்தேகம் இருந்தாலும் காவல் துறையினரை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.


மேலும், காவல் நிலையத்தின் செயல்பாடுகள், எப்படி புகார் அளிப்பது உள்ளிட்டவை குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். தஞ்சாவூர் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.என். ராஜா, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வி. சந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல் தஞ்சை அருகே வல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வல்லம் டிஎஸ்பி நித்யா வழங்கினார்.


பள்ளி குழந்தைகளுக்கு நேர்முக விளக்கங்கள், காவல் நிலையத்தை பற்றியும், காவல் நிலையங்களில் என்னென்ன செயல்பாடுகள் நடத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா உத்தரவிட்டார். இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகளை வரவழைத்தனர்.




தொடர்ந்து அவர்களுக்கு வல்லம் டி.எஸ்.பி., நித்யா விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசுகையில், குழந்தைகளை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், வார்த்தைகளாலோ அல்லது உணர்வுகளை பாதிக்கும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்வது வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், பள்ளி மாணவிகள் இதுபோன்று தங்களுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் அதை காவல் நிலையத்தில் எப்படி தெரிவிப்பது, அதை போலீசார் எப்படி கையாளுகின்றனர், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் போலீசார் நடத்தும் அன்பான விசாரணை, அணுகுமுறை, அவர்களின் பெயர் மற்றும் எவ்வித விபரங்களும் தெரிவிக்கப்படாமல் நடத்தப்படும் விசாரணை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் காவல் நிலையத்தில் நடைமுறையில் உள்ள செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிளுக்கு பரிசுகள் மற்றும் பேனா, பென்சில், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டது. இதில் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




இதேபோல் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி, ஏட்டுக்கள் அமுதா, சுவாமிநாதன் ஆகியோர் பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மாதாக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு சென்று குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பரிசுகள் வழங்கினர்.


மேலும் கள்ளப்பெரம்பூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, காவலர் சுந்தரி ஆகியோர் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.