தஞ்சையில் தங்கையின் வீட்டுக்கு வந்த பெண்ணிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



சிவகங்கையை சேர்ந்தவர் புவனேஸ்வரி (42). சம்பவத்தன்று இவர் தஞ்சையில் உள்ள தங்கையின் வீட்டிற்கு பஸ்சில் வந்தார். தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கிய புவனேஸ்வரி தங்கையின் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோவில் விளார் சாலை கற்பக விநாயகர் கோவில் தெருவுக்கு வந்தார். பின்னர் ஆட்டோவிற்கு பணம் கொடுப்பதற்காக கைப்பையை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கைப்பையில் வைத்திருந்த  32 பவுன் தங்கநகைகள் காணாமல் போயிருந்தது.

இதையடுத்து புவனேஸ்வரி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




ஆடு திருட முயற்சி:

தஞ்சை அருகே வெண்ணாற்றங்கரையில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருட முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சையை அடுத்த கூடலூர் பெரிய தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (23). இவர் வெண்ணாற்றங்கரையில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர். இதை பார்த்து புருஷோத்தமன் கத்திக் கொண்டே வந்தார். உடன் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அந்த 2 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் தஞ்சை அருகே கண்டிதம்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (20 ), வினோத் (19) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.






பைக் மற்றும் பொருட்கள் திருட்டு :

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்தவர் அசார் முகமது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நஜியாபேகம் (28). கடந்த 16ம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் 17ம் தேதி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பித்தளை தவளை, தையல் எந்திரம் ஆகியவற்றை காணவில்லை.

மேலும் வீட்டின் முன் பக்கம் நிறுத்தப்பட்டிருந்த பைக்கும் திருட்டு போயிருந்தது. வீடு பூட்டப்பட்டு இருந்ததை ோட்டம் விட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் நஜியா பேகம் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.