தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேடப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குநர் ஆர். சிவானந்தம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தும் முதுகலை பட்டப்படிப்பு படித்தும் வரும் மாணவர்களுக்கான களப் பயிற்சியை தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு நிறைவுக்கு பின்பு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதேபோல, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலான இடம் தேடப்படுகிறது. தமிழகத்தில் தற்போது கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர் மாவட்டம்), பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), துலுக்கர்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்), வெம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்), பூதிநத்தம் (தருமபுரி மாவட்டம்), கீழ்நமண்டி (திருவண்ணாமலை மாவட்டம்) உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணி நடைபெறுகிறது.
தற்போது மக்களிடம் தொல்லியல் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், தொல்லியல் பட்டப்படிப்புகள் படிப்பதற்கு நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் முன் வருகின்றனர். இதையொட்டி, தொல்லியல், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை மற்றும் அருங்காட்சியகம் ஆகிய 3 பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தி வருகிறது.
இதில், படிக்கும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் மணிமண்டபத்திலுள்ள அகழ்வைப்பகத்தில் 10 நாள்களுக்கு களப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், மாணவர்களுக்கு வரலாற்று நினைவு சின்னங்கள், பழங்கால கோயில்களைப் பாதுகாத்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பாக தொடர்புடைய வல்லுநர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பின்னர் அறிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கடல் பல கடந்து, சமர் பல வென்று இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலப்பரப்பை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியது சோழப்பேரரசு.
தமிழரின் கலை, இசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, கைவினை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சோழர் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்து பாரெங்கும் பரவின. தமிழரின் பண்பாடும், சிற்பக்கலைகளும் உலக பெருமை வாய்ந்தவை. உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்காலை கலைப் பொருட்கள், நினைவுச்சினங்களைப் பாதுகாக்கவும் தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.