மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் தலைமையில் நகராட்சி சுகாதாரத் துறையினர் பிரபலமான குரு டீக்கடை மீது வந்த புகாரின் பேரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தியதும், எண்ணெய் மிகுந்த உணவு பண்டங்களை செய்தித்தாள் பேப்பரில் வைத்து கொடுத்ததால் நகராட்சி துறை அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைப்பதாக கூறினர். 




அப்போது, அங்கு வந்த புளியந்தெரு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் அமர்நாத் என்பவர் டீக்கடைக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 1 மணிநேரத்திற்கு முன்பாக மாமுல் கேட்டதற்கு கொடுக்காததால் கடையை பூட்டி சீல் வைக்கிறீர்களா? என்றும் சுகாதாரமற்ற முறையில் எத்தனையோ கடைகள் உள்ளது அவற்றை எல்லாம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், கடையை பூட்டக்கூடாது என்று கூறி நடவடிக்ககை எடுக்கவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், மயிலாடுதுறை காவல்துறையினரை உதவிக்கு அழைத்த நகராட்சி துறையினர், காவல்துறையினர் வரும் வரை டீ கடைக்கு எதிரே இருந்த பழக்கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்ததில் மாம்பழங்கள் ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்டதாகவும், கடையின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறி  கடையை சீல் வைக்க முயன்றனர்.




நகராட்சி துறையினர் கடைக்கு சீல் வைக்க முற்பட்டபோது  அங்கு திரண்ட பொதுமக்கள் எதிரே உள்ள டீ கடையை சீல் வைக்காமல்  விட்டுவிட்டு ஏன் இந்த கடையை மட்டும் சீல் வைக்கிறீர்கள் என்று கடை நிர்வாகி மற்றும்  பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நகராட்சி அதிகாரிகள் பழக்கடைக்கு  சீல் வைக்கவிடாமல்  தடுத்தனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் உள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமீபத்தில் உயர்தர சைவ உணவகமான காளியாகுடி ஹோட்டலில் கரப்பான் பூச்சி கிடந்தும் அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் பெறுவதாக குற்றம்சாட்டினர். இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.




அப்போது அங்கு வந்த திமுக நகராட்சி நகர்மன்ற தலைவர்  செல்வராஜ் யார் கடையை பூட்டி சீல் வைக்க சொன்னது என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார், இதனை கேட்ட பொதுமக்கள் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்காமல் தடுக்க நீங்கள் யார் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து நகராட்சி நகர்மன்ற தலைவர் செல்வராஜ் ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அவர்களை தடுத்து கூட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியாமல் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சீனிவாசன் திரும்பி சென்றார். அரசு அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் நகராட்சி நகரமன்ற தலைவர் செல்வராஜ் தடுத்தது பொதுமக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. 




இரு தரப்பு பிரச்சினை காரணமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பி சென்றனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு பிரபல ஓட்டலில் கரப்பான் பூச்சி கிடந்த நிலையில் அந்த ஓட்டலுக்கு வெறும் நோட்டீஸ் மட்டும் அனுப்பிய நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பணம் கொடுக்காத கடைகள் மீது சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டை தெரிவித்தனர்.




மேலும் பாரபட்சமின்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். மயிலாடுதுறை நகரில் சிறிய டீக்கடை முதல்,  பிரபல ஹோட்டல் வரை சுகாதாரமற்ற முறையில் இயங்குவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. நகரின் பிரதானமான சின்னக்கடை வீதியில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.