தஞ்சாவூர்: அழிந்து வரும் பாரம்பரிய கலையான கரகாட்டத்தை அரசு விழாக்கள் மற்றும் கோயில் விழாக்களில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் நடன நையாண்டி மேளச் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
அந்த வகையில் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் நடன நையாண்டி மேளச் சங்கத்தினரும் ஒரு மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நமது மண்ணின் பாரம்பரிய கலையான அழிந்து வரும் கரகாட்ட கலையை பாதுகாக்கும் விதமாக, துணை ஆட்டமான குறவன், குறத்தி நடனத்தை அரசு தடை செய்துள்ளது. இதற்காக தமிழக அனைத்து மாவட்ட கலைஞர்களும் முதல்வருக்கும், தமிழ்நாடு கலை நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கரகாட்டம் என்ற பெயரில் குறவன் குறத்தி நடனத்தை காட்டி இது தான் கரகாட்டம் என தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆபாச கலையாக சித்தரித்து கரகாட்டம் என்ற பெயரில் இணையதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு கலையை அவமானப்படுத்தி வந்தனர். இதனால் கரகாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் பார்க்க வருவதில்லை குழந்தைகளையும் பள்ளி, கல்லூரி விழாக்களில் கரகாட்ட நிகழ்ச்சி செய்ய அனுமதிப்பதில்லை.
அழிந்து கொண்டு வரும் கரகாட்ட கலையை மீட்கும் வகையில்அரசு குறவன், குறத்தி நிகழ்ச்சிக்கு தடை செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் கோயில் விழாக்களில் குறவன், குறத்தி இல்லாத கரகாட்டம் தேவையில்லை என வாய்ப்பு அளித்தவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து வருகின்றனர்.
இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு பாதிப்படைந்த கலைஞர்கள் மிகவும் மனஉளைச்சலில் சிக்கி தவித்து வருகின்றனர். கலைஞர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். அரசு விழாக்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் விழாக்களில் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாடு, மயில், காளி, சிவன், சக்தி போன்ற நடன கலைஞர்களின் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து கலெக்டர் அலுவலக வாயில் முன்பு கரகாட்டம் ஆடி தங்களின் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். அரசு சார்பில் நடக்கும் விழாக்களில் தங்களின் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேறு பணிகள் தெரியாத நிலையில் இந்த கலைகளை மட்டுமே நம்பியுள்ள கலைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.