தஞ்சாவூர்: கோயில் கும்பாபிஷேக பணிகளில் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து தஞ்சை கலெக்டரிடம் மானோஜிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.


அப்போது தஞ்சாவூர் மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி தெற்கு தோட்டம் பஞ்சாயத்து, ராமநாதபுரம் கூடுதல் பஞ்சாயத்து என இரண்டு பஞ்சாயத்திலும் அடங்கிய பகுதிதான் மானோஜிப்பட்டி. இந்த பஞ்சாயத்துகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம்.

எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் 1500-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறோம். இங்குள்ள முத்து மாரியம்மன் கோயிலில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பொது மக்களும் வணங்கி வருகிறோம். இக்கோயில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு முன்னெடுப்பு பணிகள் நடந்து வந்தது. ஆனால் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டபோது எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே எங்கள் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு கொடுப்பதற்கு முன்னதாக கலெக்டர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.


இதேபோல் ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் ஆன நிலையிலும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை இன்னும் வழங்காததால் மனுக்களை மாலையாக கோர்த்து தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க மூதாட்டி ஒருவர் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.





மூதாட்டி ஒருவர் இதுவரை தான் அளித்த கோரிக்கை மனுக்களை மாலையாக கோர்த்து அணிந்து வந்தார். பின்னர் அவர் கூறியதாவது: என் பெயர் உஷா (64). தஞ்சை மானம்புச்சாவடியில் எனது தந்தை ஆரோக்கியதாசுடன் (98) வசித்து வருகிறேன். நான் திருவையாறு பேரூராட்சியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். எனது சம்பளத்தில் ரூ.1.78 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டது. இதில் ரூ.75 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.

மீதமுள்ள தொகை ரூ.1.03 லட்சம் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இதுவரை 6 முறை மனுக்கள் கொடுத்துள்ளேன். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தான் இதுவரை கொடுத்த மனுக்களை மாலையாக அணிந்து வந்தேன்.

எனது தந்தை மிகவும் வயதான நிலையில் உள்ளார். அவரது மருத்துவச் செலவுகளுக்கு கூட பணமின்றி தவிக்கிறேன். இனியும் காலம்தாழ்த்தாமல் எனக்கு சேர வேண்டிய தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.