தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஊசிமணி, பாசிமணி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திட அனுமதி கோரி நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த பழங்குடியின மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

அந்த வகையில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் அன்பு ஆகியோர் தலைமையில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சை பழைய பேருந்து நிலையம் துவங்கிய காலத்தில் இருந்து நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த பழங்குடியின மக்கள் பிழைப்பிற்காக ஊசி மணி, பாசிமணிகளை பொது மக்களிடம் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்த வருமானத்தை நம்பி 25க்கும் அதிகமான குடும்பத்தினர் உள்ளனர். தற்போது பழைய பேருந்து நிலையத்தில் வாடகைக்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள், நரிக்குறவர்களை ஊசிமணி, பாசிமணி விற்கக்கூடாது என்று தரக்குறைவாக பேசி பொருள்களை சேதப்படுத்துவது, விரட்டி அடிப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதனால் நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளோம். மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு இதுபோன்ற சம்பவம் பழைய பேருந்து நிலையத்தில் நடந்தது அப்போது மாவட்ட கலெக்டர் தலையிட்டு நரிக்குறவர்களை பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திட உறுதி செய்தார். தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நரிக்குறவர் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.





இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேர்தல் வாக்குறுதிகள் கூறியதன் படி முறையான சிறப்பு பென்சனை டிஏ உடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு ஆகியவற்றை வழங்க வேண்டும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வு காலப் பலன்களை ஓய்வு பெறும் ஒன்றை முழுமையாக வழங்க வேண்டும் என் மனம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் உமா தலைமை வகித்தார். வீராசாமி கமலா ஸ்ரீமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் மனோகரன் தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் ஆறுமுகம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாநில முன்னாள் செயலாளர் அம்புஜம் காமராஜ் சங்க மாநில துணைத்தலைவர் மதிவாணன் மற்றும் பலர் பேசினர்.

சங்க மாநில செயலாளர் முருகையன் நிறைவுறையாற்றினார். தஞ்சை ஒன்றிய பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.