கும்பகோணத்தில் தீர்த்தவாரி கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடுபவர்களை புனிதப்படுத்தி விட்டு, அவர்களின் பாவங்களை ஏற்றுக் கொள்கின்றன. அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டு துலா மாதத்தில் காவிரியில் நீராடிதங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கி கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். நடக்க முடியாத ஊறமுற்ற பக்தர், கடை முழுக்கு அன்று காவிரியில் புனித நீராட போக முடியவில்லையே என சிவபெருமானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான், காவிரியில் மூழ்கி எழு, உனக்கும் நன்பேறு உண்டாகும் என்றார். அதன் படி ஊனமுற்றோர், கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடி முக்தியடைந்தார். இதுவே முடவன் முழுக்கு என்றும் கூறுவார்கள்.ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், கடை முழுக்கு அன்று புனித நீராடினால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.




ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே, துலா ஸ்நானம் வழிபாடாகும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் காவிரியில் நீராடுவதாக துலாக் காவிரி புராணம் கூறுகிறது. முடவன் முழுக்கு காவிரியில் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகத்துடன் தீர்த்தவாரி நடைபெறும். அந்தச் சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர். இதனால் நம்முடைய தலைமுறை பாவங்களும், கர்ம வினைகளும், வம்ச சாபம், பெண் சாபம் யாவும் அகலும் என்கிறார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற கடைமுழுக்கையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபப் படித் துறையில் செவ்வாய்க்கிழமை ஏராளமானோர் திரண்டு புனித நீராடினர்.துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுதல் புனிதமானது என்பது ஐதீகம். அவ்வாறு நீராடினால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவம் விலகுகிறது என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த துலாம் மாதத்தில் மாதந்தோறும் நீராட முடியாவிட்டாலும் முதல் நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவர் என்ற ஐதீகமும் உண்டு.



கடைமுழுக்கையொட்டி திருவையாறு புஷ்ய மண்டபக் காவிரிப் படித்துறையில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர், திருயைவாறு ஐயாறப்பர் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், ஐயாறப்பர் கோயிலிலிருந்து அஸ்ரத்தேவர் புறப்பட்டு காவேரி ஆற்றின் புஷ்ய மண்டப படித்துறையில் எழுந்தருளி  21 வகையான அபிஷேகப்பொருட்களால் தீர்த்தவாரி நடைபெற்றது.




இதே போல் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் கடை முழுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. வருடந்தோறும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன், ஊர்வலமாக சென்று மாகமக குளத்தில் தீர்த்த வாரி நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடித்து வருவதால், கோயில் வளாகத்திலேயே தீர்த்த வாரி நடைபெற்றது. முன்னதாக அஸ்ரத்தேவரை, கோயில் சுற்று பிரகாரத்தில் வலம் வந்து, ராஜகோபுரம் முன்பு 21 வகையான பொருட்கள்  அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு கோயில் உள்பிரகாரத்தில் வீதியூலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.