தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையமான குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த  வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி


தமிழகத்தின் பண்பாட்டுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் அடையாளங்களில் ஒன்று தஞ்சாவூர். சமையல் தொடங்கி, இயல், இசை, நாடகம் என முத்திரைப் பதித்த மண் இது. கலைகள் செழித்தோங்கி வளர்ந்த தஞ்சை தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தைத் தாங்கி நிற்கிறது. பிற்கால சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சை ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தந்த பூமி. இங்கு நிரம்பி இருக்கும் கோயில்கள் தமிழர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கி உள்ளன.




குந்தவை நாச்சியார் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்


தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்கான 2024 மக்களவை பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதிவாரியாக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு. பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவை வருகின்ற 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.


மூன்று அடுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு


முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு மாநில காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு பணிகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.


மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு


மேலும், மருத்துவக் குழு, தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணிநேர தீயணைப்பு வண்டிகள் மற்றும் வீரர்கள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் ஊடக மையம், கட்டுப்பாட்டு அறை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து முன்னேற்படுகள் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர்  இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.