தஞ்சாவூர்: வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று உடல்நலக்குறைவால் இறந்த தங்களின் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம். இவரது மனைவி கனகாம்பாள். இவர்களின் இளைய மகன் கார்த்திக் (24). குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கார்த்திக் மலேசியாவிற்கு வேலைக்காக சென்றார். அங்கு கார்த்திக்கிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடன் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்து விட்டார். இதுகுறித்த தகவல் காரத்திக்கின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த அவர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் அவர்கள் கூறுகையில், குடும்ப வறுமையின் காரணமாக எங்கள் மகன் வெளிநாட்டு வேலைக்கு சென்றான். அங்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக கூறினார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீளவே முடியாது.
எங்கள் மகன் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் மலேசியா நாட்டில் உயிரிழந்த எங்கள் மகன் கார்த்திக்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் விடுத்துள்ளனர்.
கத்திக்குத்து
தஞ்சை பூக்கார மன்னயார் தெருவில் உள்ள கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது. இதே தெருவை சேர்ந்த சுகுமார் என்பவரின் மனைவி திருச்செல்வி (35) என்பவரது வீட்டிற்கு உறவினரான திருச்சியை சேர்ந்த மணவாளன் என்பவர் வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த சிவா (30), பிராங்கிளின் (31) ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த மணவாளன் இங்கிருந்து மது அருந்தாதீர்கள் என அவர்களை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து மணவாளன் நடந்த விவரங்களை திருச்செல்வியிடம் தெரிவித்துள்ளார். பின்னர் திருச்செல்வி, மணவாளன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் நடந்த சம்பவங்கள் குறித்து தட்டி கேட்டனர். இதில் சிவா ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார். மேலும் அவரது ஆதரவாளர்கள் செல்வராஜ், திருக்குமரன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த திருச்செல்வி உள்பட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். பிராங்க்ளினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.