தஞ்சை மாவட்டத்தில் ஆன்லைன் வேலை எனக்கூறி வாலிபரிடம் ரூ.26.79 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான வாலிபர். வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சொந்த ஊருக்கு வந்த இவர் ஆன்லைனில் வேலை தேடி கொண்டிருந்தார். சம்பவத்தன்று ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக இவருடைய டெலிகிராமில் குறுந்தகவல் வந்துள்ளது.

இதனை நம்பிய அவர் குறுந்தகவலில் இருந்த லிங்கை ஓபன் செய்தார்.  தாங்கள் கொடுக்கும் பணியை முடித்தால் குறிப்பிட்ட தொகை கமிஷன் கொடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பேரில் அந்த வாலிபர் அந்த பணி செய்தார். அந்த வாலிபர் பணியை உடனே முடித்துவிட்டதால் அவருடைய வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை வந்துள்ளது. பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் மற்றொரு வங்கி கணக்கிற்கு  பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

அவர் செலுத்திய உடன் மீண்டும் பணிக்கான தகவல் வந்துள்ளது.  தொடர்ந்து இவ்வாறு செய்ததால் அவருக்கு பணி சம்பந்தமான தகவல்களை கொடுத்துள்ளனர். இதனால் அந்த வாலிபர் அதில் முதலீடு செய்ய மீண்டும் குறிப்பிட்ட தொகையை மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து அவருக்கு பணிக்கான தகவல்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் செய்த பணிக்கான தொகை அவருடைய வங்கி கணக்கிற்கு வரவில்லை.

இதுகுறித்து அதில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அந்த நபர்களிடம் கேட்டபோது, உங்களுக்கு கொடுக்கக்கூடிய டாஸ்கை தொடர்ந்து முழுவதையும் முடித்தால் தான் உங்களுக்கு பணம் வரும் என்று கூறியுள்ளனர். அந்த வாலிபர் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பலமுறை மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு  ரூ. 26 லட்சத்து 79 ஆயிரத்து 542 -யை செலுத்தியுள்ளார்.  ஆனால் அவருக்கு எவ்விதத்திலும் பணம் வந்து சேரவில்லை. பணம் வராதது குறித்து பலமுறை கேட்டபோதும் கொடுத்த பணியை முழுவதும் முடித்தால் தான் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு தொடர்ந்து பணி செய்தும் பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





சிறுவனை தாக்கிய இருவர் கைது

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் 16வயது சிறுவன். இவர் அந்தபகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரை பாரதிதாசன் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கரண் (20) மற்றும் விளார் தில்லைநகரை சேர்ந்த லோக நாதன் மகன் சந்தோஷ் என்ற சண்டி (20 ) ஆகிய இருவரும் திடீரென்று தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுவன் செய்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் கரண், சந்தோஷ் என்ற சண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிறுவனை தாக்கியதற்கான காரணம் குறித்து அவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.