தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 2 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்கதிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொள்முதல் பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.



தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. இதில் நேற்று முன்தினம் நூறு டிகிரியை தாண்டி வெயில் அடித்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக அதிகபட்சமாக பூதலூரில் 167 மில்லி மீட்டர் மழை பதிவானது.

அதே போல் கல்லணையில் 155, தஞ்சாவூரில் 122, நெய்வாசல் 118, வல்லம் 117, பட்டுக்கோட்டை 88, ஒரத்தநாடு 41 என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவானது. தஞ்சாவூர், பூதலூர், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மழையினால் பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுகல்விராயன்பேட்டையில் க.ரவிச்சந்திரன் என்பவரது வயலில் அறுவடை செய்ய, அறுவடை இயந்திரத்தை வயலில் நேற்று முன்தினம் மாலை நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால் இரவு பெய்த மழையால் ரவிச்சந்திரனின் வயல் முழுவதும் தண்ணீர் தேங்கி நெற்கதிர்கள் நீரில் மூழ்கியது. சுமார் இரண்டடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் நேற்று அறுவடை செய்ய முடியவில்லை. அறுவை நெல் இயந்திரமும் சேறு கதியில் சிக்கி கொண்டதால் வெகு சிரமத்துக்கு பின்னர் இயந்திரம்  வெளியே மீட்கப்பட்டது.

தஞ்சாவூர், பூதலூர் வட்டாரங்களில் பெய்த கன மழையால் சம்பா சாகுபடிக்காக வயலில் விடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர் நாற்றங்கால் மழை நீரில் மூழ்கியுள்ளது. அதே போல் கல்விராயன்பேட்டை பகுதியில் 50 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த நிலையில் இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது.  மழைநீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஆங்காங்கே ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் அருகே வல்லம் -ஆலக்குடி இடையே பேய்வாரி காட்டு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மீது உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பாலத்துக்கு கான்கீரிட் பணிகள் நடைபெற இருந்த நிலையில் கொட்டித் தீர்த்த கன மழையாலும், வாய்க்காலில் வந்த மழைநீரினாலும் பணிகள் பாதிக்கப்பட்டது. பாலப் பணிகளுக்காக அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர் இயந்திரமும் மழைநீர் சூழ்ந்து எடுக்க முடியாமல் பின்னர் பொக்லீன் இயந்திரம் மூலம் மீட்கப்படடது.


பாலப்பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் அருகே போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பாதையும் நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் அவ்வழியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் நெல் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், கொள்முதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று பெரும்பாலான இடங்களில் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.

கல்விராயன்பேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 300 மூட்டை நெல் போதிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டு இந்த மழையால் சேதமாகியுள்ளது. கொள்முதல் நிலையங்களில் நெல் அதிகமாக இருப்பதால் கொள்முதல் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.