தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டில் போதிய இருக்கைகள் இல்லாததாலும், அங்கு கடைகள் வைத்துள்ளவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளாலும் பஸ்சிற்காக பயணிகள் வெகு நேரம் நிற்கும் நிலை உள்ளது. மேலும் வயதானவர்கள் இதனால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 14.44 கோடி மதிப்பில் 2018ம் ஆண்டில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இதில், 39 நகரப் பேருந்துகள் நிற்பதற்கான நிறுத்துமிடங்கள், 93 கடைகள், கழிப்பறைகள், காவல் உதவி மையம், பயணிகள் காத்திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. முன்பு இருந்த பஸ் ஸ்டாண்டில் மக்கள் நிற்க கூட முடியாத அளவிற்கு நெரிசலுடன் இருந்தது.
இந்த பஸ்ஸ்டாண்டிலிருந்து பூதலூர், மெடிக்கல் காலேஜ், வல்லம், திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, அம்மாபேட்டை, நாஞ்சிக்கோட்டை, புதிய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல, கும்பகோணம், அரியலூர் போன்ற புற நகர் பஸ்களும் இந்த பஸ்ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றன. இதனால், இந்த பஸ்ஸ்டாண்டிற்கு பல்வேறு வேலைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பயணிகள் வந்து செல்வதற்கேற்ப இந்த பஸ்ஸ்டாண்டில் வசதிகள் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஸ்மாண்ர்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இந்த பஸ்ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட இருக்கைகள் சில மாதங்களிலேயே உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து, சிமென்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டன.
இந்த பஸ்ஸ்டாண்டில் கடைகள் எடுத்துள்ள வியாபாரிகள் ஆக்கிரமிப்பு காரணமாக இருக்கைகளில் அமருவதற்கு பயணிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும், கடைகளும் எல்லையைக் கடந்து நடைபாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் நிழலில் கூட நிற்பதற்கு இடம் கிடைப்பதில்லை.
பயணிகள் தங்களது ஊருக்குச் செல்ல பேருந்துகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் இருக்கிற குறைந்த அளவிலான இருக்கைகளில் அமருவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் நெடு நேரம் நின்று மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.
கடைக்கு முன்பாக நிற்கும் பயணிகளையும் கடை வியாரிகள் விரட்டுவதால், நிழக்குடையை விட்டு வெளியில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் தெரிவித்தது:
பழைய பஸ்ஸ்டாண்டில் வரக்கூடிய பயணிகளுடன் ஒப்பிடுகையில் இருக்கிற இருக்கைகள் மிக மிகக் குறைவாக இருக்கிறது. இதனால், பயணிகள் வெகுநேரம் நின்று கொண்டிருக்கும் நிலை உள்ளது. கடைகளிலும் அடுப்பு, தேநீர் கொதிகலன் போன்றவை வெளியே வைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வரக்கூடிய வெப்பம் தாங்காமல் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். கடைகளும் நடைபாதையில் நீட்டிக்கப்படுவதால், பயணிகள் நடந்து செல்வதற்குச் சிரமப்படுகின்றனர். வாடகை அதிகம் என்று கூறிவிட்டு வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இருக்கைகள் மீதும் அதன் கீழும் சிறு வியாபாரிகள் தங்களின் பொருட்களை வைத்து விடுகின்றனர். இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல் இலவச கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் வசதி சரியான முறையில் செய்து தரப்பட வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் கடந்த வாரத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.